திருச்சியில் அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்-மறியல் போராட்டம் - 1,250 பேர் கைது


திருச்சியில் அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்-மறியல் போராட்டம் - 1,250 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2020 4:00 AM IST (Updated: 9 Jan 2020 12:42 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,250 பேர் கைது செய்யப்பட்டனர். வேலை நிறுத்த போராட்டத்தினால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

திருச்சி,

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாைர வார்க்கும் திட்டத்தை கைவிடவேண்டும். மோட்டார் வாகன தொழிலை அழிக்கும் சாலை போக்குவரத்து மசோதாவை திரும்ப பெறவேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளத்தை ரூ.26 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்க கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட எல்.பி.எப், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து, மின்சார வாரியம், சத்துணவு உள்ளிட்ட அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள் திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் குவிந்தனர். தொழிற்சங்க கொடிகளுடன் திரண்ட அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக திருச்சி தலைமை தபால் நிலையம் நோக்கி புறப்பட்டனர். ஊர்வலம் தலைமை தபால் நிலையத்தை அடைந்ததும் அதன் முன்பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது. சாலை மறியலில் ஈடுபட்ட 550 பெண்கள் உள்பட 1,250 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை போலீஸ் வாகனம் மற்றும் அரசு டவுன் பஸ்களில் ஏற்றி திருச்சி கலையரங்கம் வளாகத்தில் உள்ள அரசு திருமண மண்டபத்திற்கும், கருமண்டபத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கும் கொண்டு சென்று அடைத்தனர்.

சாலை மறியல் போராட்டத்தையொட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம், தலைமை தபால் நிலையம் ஆகிய வற்றின் பிரதான கேட்கள் மூடப்பட்டு இருந்தது. மேலும் இரும்பு தடுப்புகளையும் போலீசார் அமைத்து இருந்தனர். இதனால் தபால் நிலையத்திற்குள் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மறியல் நடைபெற்ற பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் தொழிலாளி ஒருவரை சாலையில் பிணம் போல் படுக்க வைத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.பின்னர் அவரை நான்கைந்து பேர் சேர்ந்து தூக்கி ெகாண்டு சென்றனர். இந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நேற்று வழக்கம் போல் இயங்கின. பஸ்கள், ஆட்டோக்களும் வழக்கம் போல் ஓடின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

லால்குடி

குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். நெல், கரும்பு, கோதுமை உள்ளிட்ட விளை பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலையை உறுதிபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் லால்குடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மத்திய குழு சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் பசுபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பாலு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் மணிகண்டன், தையல் தொழிலாளர்கள் சங்க நிர்வாகி குணா உள்ளிட்ட பலர் லால்குடி ரவுண்டானா பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று, தாலுகா அலுவலகம் முன்பு திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் கைது செய்தார்.

மண்ணச்சநல்லூர்

மண்ணச்சநல்லூரில் உள்ள எதுமலை பிரிவு சாலையில் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 30 பேர் அந்த வழியாக வந்த பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

மணப்பாறை

மணப்பாறையில் தொழிற்சங்கங்கள் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமராஜர் சிலை அருகே இருந்து தொடங்கிய ஊர்வலம் பின்னர் திண்டுக்கல் சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு வந்ததும் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 68 பெண்கள் உள்பட 154 பேரை மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

மேலும், ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. பின்னர் செல்போன் கடை உரிமையாளர்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள சில நிறுவனங்களை அகற்றிடக் கோரியும் கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினர். அமைதி ஊர்வலமும் நடைபெற்றது.

வையம்பட்டி

வையம்பட்டி கடைவீதியில் உள்ள திண்டுக்கல் பஸ் நிறுத்தம் அருகே தொழிற்சங்கத்தினர் மற்றும் கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 53 பேரை வையம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

துவரங்குறிச்சியில், தொழிற்சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் பஸ் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 32 பேரை துவரங்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

Next Story