நாடு தழுவிய வேலை நிறுத்தம்: பல்வேறு இடங்களில் சாலை மறியல்


நாடு தழுவிய வேலை நிறுத்தம்: பல்வேறு இடங்களில் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Jan 2020 10:30 PM GMT (Updated: 8 Jan 2020 8:15 PM GMT)

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தையொட்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

சிவகங்கை,

தொழிலாளர் துறையில் செய்யப்படும் சீர்திருத்தம், தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி மற்றும் விஸ்வநாதன் சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டி, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் உமாநாத், செயலாளர் வீரையா, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் காளைலிங்கம், சகாயம், கண்ணன், எல்.பி.எப். தலைவர் வீரபாண்டி, ஐ.என்.டி.யூ.சி. வீரகாளை ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் அங்கன்வாடி ஊழியர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட 400-க்கும் மேற்பட்டோரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக அங்கன்வாடி துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, போராட்டம் காரணமாக பாதிப்பு இல்லாத வகையில் மாவட்டத்தில் உள்ள 375 அங்கன்வாடிகளிலும் வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது என்றார்.

இதேபோல் காரைக்குடியில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச்செயலாளர் பி.எல். ராமச்சந்திரன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சாத்தையா, தி.மு.க. தொழிற்சங்க மாவட்ட கவுன்சில் செயலாளர் திருநாவுக்கரசு, போக்குவரத்து பிரிவு செயலாளர் குமார் பிரசாத், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, சிவகுமார், ஜெயவீரபாண்டியன், அழகர்சாமி, ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் ராஜா, கண்ணன், ராமராஜ், தி.மு.க. தொழிற் சங்க நிர்வாகிகள் வைரவன், மலையரசன் ஆகியோர் தலைமையில் தொழிற்சங்கத்தினர் காரைக்குடி பழைய பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணாசிலை நோக்கி வந்தனர். அங்கு அவர்களை போலீசார் தடுத்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் தரையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 130 பேரை காரைக்குடி போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காளையார்கோவில் பஸ் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் திருச்செல்வம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தென்னரசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பஸ் மறியலில் ஈடுபட்டவர்கள் 20 பேரை காளையார்கோவில் போலீசார் கைது செய்தனர்.

திருப்புவனத்தில் விவசாய சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் திருப்புவனம் சந்தை திடலில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்து மணிமந்திர விநாயகர் கோவில் அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, மாவட்ட குழு உறுப்பினர் தண்டியப்பன், கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சக்திவேல் உள்பட 33 பேர் கலந்துகொண்டு மறியல் செய்தனர். இவர்களை திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் கைது செய்தார்.

Next Story