திருப்பூர் மாவட்டத்தில், சாலை மறியலில் ஈடுபட்ட 1,157 பேர் கைது


திருப்பூர் மாவட்டத்தில், சாலை மறியலில் ஈடுபட்ட 1,157 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2020 10:15 PM GMT (Updated: 8 Jan 2020 11:56 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தையொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட 1,157 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்,

சிறு, குறு தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மோட்டார் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

அதன்படி திருப்பூரிலும் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., டபிள்யூ.பி.யூ.சி., ஏ.ஐ.டி.யு.சி., எம்.எல்.எப், ஏ.ஐ.சி.சி.டி.யு. என்பது உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் கோபி, மாநகர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துகண்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் டி.கே.டி. நாகராஜ், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உன்னி கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சேகர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் மைதிலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பலர் சாலையில் அமர்ந்தபடி கோஷமிட்டனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்பட 680 பேரை கைது செய்து, வாலிபாளையத்தில் உள்ள ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

தொழிற்சங்கங்களின் இந்த போராட்டத்தையொட்டி அங்கு துணை போலீஸ் கமிஷனர் பத்ரிநாராயணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதுபோல் காங்கேயத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட 100 பேரும், அவினாசியில் சாலைமறியலில் ஈடுபட்ட 65 பேர், பல்லடத்தில் மறியலில் ஈடுபட்ட 150 பேர், உடுமலையில் மறியலில் ஈடுபட்ட 66 பேர், ஊத்துக்குளில் மறியலில் ஈடுபட்ட 96 பேர் என மொத்தம் மாவட்டம் முழுவதும் நேற்று சாலைமறியலில் ஈடுபட்ட 1,157 பேர் கைது செய்யப்பட்டனர். தாராபுரத்தில் ஆர்பாட்டமும் நடைபெற்றது. 

Next Story