கோயம்பேடு உள்பட 3 இடங்களில் பொங்கல் சிறப்பு பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்கள் திறப்பு


கோயம்பேடு உள்பட 3 இடங்களில் பொங்கல் சிறப்பு பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்கள் திறப்பு
x
தினத்தந்தி 10 Jan 2020 5:00 AM IST (Updated: 9 Jan 2020 10:39 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சிறப்பு கவுண்ட்டர்களை கோயம்பேட்டில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி 30 ஆயிரம் சிறப்பு பஸ்களை தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. இதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில் சென்னை, கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் 15 மையங்கள், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லியில் தலா 1 வீதம் மொத்தம் 17 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் கோ.கணேசன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் கு.இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10-ந்தேதி (இன்று) முதல் 14-ந்தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்து 120 பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து 16 ஆயிரத்து 75 பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 14 ஆயிரத்து 45 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக, 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டு இருந்தது. இந்த முன்பதிவு வசதியை www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com, www.goibibo.com ஆகிய இணையதள முகவரிகளிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். தற்போது வரை சென்னையில் 53 ஆயிரத்து 261 பயணிகளும் பிற ஊர்களில் 77 ஆயிரத்து 87 உட்பட 1 லட்சத்து 30 ஆயிரத்து 358 பயணிகள் முன்பதிவு செய்து உள்ளனர். இதன் மூலம் ரூ.6.84 கோடி வசூலாகி உள்ளது.

பஸ்கள் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிக்க 94450-14450, 94450-14436 என்ற தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story