கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு, காரில் ரகசிய அறை அமைத்து 18 கிலோ கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது


கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு, காரில் ரகசிய அறை அமைத்து 18 கிலோ கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2020 10:15 PM GMT (Updated: 9 Jan 2020 6:44 PM GMT)

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் ரகசிய அைற அமைத்து 18 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கம்பம்,

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு ஒரு சொகுசு காரில் கஞ்சா கடத்தி செல்வதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணிக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வினோத்ராஜா, ரவி மற்றும் போலீசார் கம்பம் மெட்டுச்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அதில் வந்த கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த விஜூ (வயது 46), சிட்டுக்காரா பகுதியை சேர்ந்த நிஜித் (46) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் கார் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது காரின் பின் இருக்கை பகுதியில் ரப்பர் ‌ஷீட் விரிக்கப்பட்டிருந்தது.

போலீசார் சந்தேகத்தின் பேரில் ரப்பர் ‌ஷீட்டை எடுத்து பார்த்தனர். அப்போது ரப்பர்‌ஷீட்டுக்கு கீழே ரகசியமான முறையில் சதுர வடிவில் அறை அமைக்கப்பட்டு இருந்தது. போலீசார் அந்த அறையை திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே 18 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. போலீசார் கவனிக்கவில்லை என்றால் கஞ்சா கேரளாவிற்கு கடத்தப்பட்டிருக்கும் என்பது குறிப் பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தியதாக விஜூ, நிஜித்தை கைது செய்தனர். மேலும் கஞ்சாவும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story