எலச்சிபாளையத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகை

எலச்சிபாளையத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
எலச்சிபாளையம்,
தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 உள்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அகரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக நேற்று காலை முதலே அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் முதியோர்கள் வந்து காத்திருந்தனர்.
ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படும் என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற எலச்சிபாளையம் போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டனர்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் வெங்கடாசலம், ரமேஷ், கிட்டுசாமி ஆகியோர் தலைமையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலாளர் மாதேஸ்வரனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முதியோர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படாது என அரசு அறிவித்துள்ளது என்றார்.
இதனால் நேற்று அதிகாலை முதலே பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த முதியோர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story