பவன் ஜல்லாத் மகளின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை; கன்னட நடிகர் ஜக்கேஷ் அறிவிப்பு


பவன் ஜல்லாத் மகளின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை;  கன்னட நடிகர் ஜக்கேஷ் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2020 10:45 PM GMT (Updated: 2020-01-10T00:49:34+05:30)

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பட்சத்தில் ஊழியர் பவன் ஜல்லாத்தின் மகள் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்குவேன் என்று கன்னட நடிகர் ஜக்கேஷ் அறிவித்துள்ளார்.

பெங்களூரு, 

நிர்பயாவை கற்பழித்து கொன்ற வழக்கில் குற்றவாளிகளான முகேஷ்(வயது 32), பவன் குப்தா(25), வினய் சர்மா(26), அக்சய் குமார் சிங்(31) ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் 4 பேரும் தீவிர கண்காணிப்பில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

வருகிற 22-ந் தேதி காலை 7 மணிக்கு 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. டெல்லி திகார் சிறையில் குற்றவாளிகளை தூக்கிலிடும் ஊழியர் இல்லை. இதனால் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் வாய்ப்பு கேட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்து வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருந்தாலும் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த தூக்கிலிடும் ஊழியர் பவன் ஜல்லாத் என்பவர் தான் நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து பவன் ஜல்லாத் அளித்த பேட்டியில், ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தயாராக இருக்கிறேன். எனது மகளின் திருமணத்தை நடத்த பணம் இல்லாமல் அனைத்து கடவுள்களையும் வேண்டினேன். தற்போது நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான வாய்ப்பை கடவுள் ஏற்படுத்தி கொடுத்து உள்ளார். இந்த பணி மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு மகளின் திருமணத்தை நடத்துவேன்’ என்றார்.

இந்த நிலையில் பவன் ஜல்லாத் தனது மகளின் திருமணத்தை நன்றாக நடத்தும் வகையில் அவருக்கு ரூ.1 லட்சத்தை நன்கொடையாக வழங்க உள்ளதாக கன்னட திரைப்பட நடிகரும், பா.ஜனதா கட்சி பிரமுகருமான ஜக்கேஷ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் ஜக்கேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அரக்கர்களை வதம் செய்வது கடவுளின் சட்டம். இத்தகைய செயல் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு மகளின் திருமணத்தை நடத்துவதாக கூறியதை கேட்டு மனம் உருகினேன். நீங்களே அவர்களை (நிர்பயா குற்றவாளிகள்) தூக்கிலிடும் பட்சத்தில் எனது கலைப்பயணத்தில் கிடைத்த ரூ.1 லட்சத்தை உங்கள் மகளின் திருமணத்துக்கு நன்கொடையாக வழங்குவேன். இன்றே அதற்கான பணத்தை ஒதுக்கிவைத்துவிட்டேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story