பாதுகாப்பு கேட்டு சுயேச்சை பெண் கவுன்சிலர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு


பாதுகாப்பு கேட்டு சுயேச்சை பெண் கவுன்சிலர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 9 Jan 2020 10:45 PM GMT (Updated: 2020-01-10T01:21:56+05:30)

ஜவ்வாதுமலை ஒன்றியக் குழு தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சுயேச்சை பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அவர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இதனை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழு ஆகியவற்றுக்கு தலைவர் தேர்தலும், ஊராட்சி மன்றங்களில் துணை தலைவர் தேர்தலும் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள 7 இடங்களில் தி.மு.க. 2 இடங்களையும், அ.தி.மு.க. 3 இடங்களையும், தே.மு.தி.க. 1 இடத்தையும் வென்றுள்ளது. மேலும் சுயேச்சையாக போட்டியிட்ட செல்வி என்ற பெண்ணும் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் செல்வி அவரது கணவர் ராமகிரு‌‌ஷ்ணன் மற்றும் உறவினர்களுடன் நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். இங்கு அவர் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சித் தேர்தலில் ஜவ்வாதுமலை ஒன்றியக்குழு வார்டு எண்3-ல் சுயேச்சையாக போட்டியிட்டு நான் வெற்றி பெற்றுள்ளேன். தேர்தல் விதிமுறைகள்படி பதவியேற்க நான் எனது கணவர் ராமகிரு‌‌ஷ்ணன் மற்றும் உறவினர்களுடன் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கடந்த 6-ந் தேதி சென்றேன். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெருங்காட்டூர் வெள்ளையன் தரப்பினர் அவரது மகள் ஜீவமூர்த்தி ஆகியோர் 5-வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றவரை தலைவராக்க கவுன்சிலர்களை கடத்த முயற்சித்தனர்.

எங்களைக் கண்டதும் வெள்ளையன் ஓடிவந்து என் கணவரை அடித்து சட்டையை கிழித்து அவமானப்படுத்தினார். வெள்ளையனுடன் சேர்ந்து அவரது மகன்கள் விஜி, பாலாஜி, மூர்த்தியின் ஆதரவாளர்கள் எங்களை ஆபாசமாக திட்டி கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து கூடியிருந்தவர்களை எச்சரித்து விரட்டியடித்துவிட்டு எங்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அ.தி.மு.க.ஒன்றிய செயலாளராக உள்ள பெருங்காட்டூர் வெள்ளையன் தன் மகள் ஜீவா மூர்த்தி என்பவரை ஒன்றியக் குழுத் தலைவராக்க இது போன்ற சட்டவிரோதமாக கும்பலாக வந்து எனக்கும், என் கணவர் ராமகிரு‌‌ஷ்ணன் மற்றும் என் குடும்பத்தை சார்ந்தவர்களை சாகடிக்காமல் விடுவதில்லை என பகிரங்கமாக மிரட்டி வருகிறார்.

எனவே 11-ந் தேதி (நாளை) ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் தலைவர், துணைத்தலைவர் மறைமுக தேர்தலுக்கு நான் வாக்களிப்பதை தடுக்கவும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தவும் உள்ள வெள்ளையன் தரப்பினர் முயற்சிக்கின்றனர். எனவே சட்டப்படி நடவடிக்கை எடுத்து கவுன்சிலரான நான் தேர்தல் விதிமுறைப்படி ஜனநாயக கடமை செய்ய தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story