நீதிபதி லோயா மரணம் குறித்து மறுவிசாரணை; மராட்டிய அரசு அறிவிப்பு

சொராபுதீன் சேக் போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரணம் குறித்து மறுவிசாரணை நடத்தப்படும் என்று மராட்டிய மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்தார்.
மும்பை,
பயங்கரவாத தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2005-ம் ஆண்டு சொராபுதீன் சேக் என்பவரை குஜராத் போலீசார் கைது செய்து இருந்த நிலையில், அவரை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். பின்னர் அடுத்தடுத்த சம்பவங்களில் அவரது மனைவி கவுசர் மற்றும் வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட சொராபுதீன் சேக்கின் உதவியாளர் துல்சிராம் பிரஜாபதி ஆகியோரும் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது போலி என்கவுண்ட்டர் எனவும், இதில் அப்போது குஜராத் மாநில மந்திரியாக இருந்தவரும், தற்போதைய மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு விசாரணை காலத்தில், வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார். விசாரணை நிறைவில், போலீஸ் அதிகாரிகள் உள்பட 22 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
தொடக்கத்தில் இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு கோர்ட்டு நீதிபதி லோயா 2014-ம் ஆண்டு தனது நண்பர் ஒருவரின் மகள் திருமணத்துக்கு நாக்பூர் சென்றபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. நீதிபதி லோயா இயற்கை மரணத்தை தழுவியதாகவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
இந்தநிலையில் மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்ற நிலையில், அந்த மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும், இதனால் வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும் சிலர் என்னை சந்தித்து வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் தேவைப்பட்டால் வழக்கு மறு விசாரணை நடத்தப்படும்” என்றார்.
உங்களை சந்தித்தது நீதிபதி லோயா குடும்பத்தினரா? என்று கேட்ட கேள்விக்கு, “அதை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை” என்று மந்திரி அனில் தேஷ்முக் பதிலளித்தார்.
Related Tags :
Next Story