திருக்கோவிலூர் அருகே, பட்டப்பகலில் விவசாயி வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு


திருக்கோவிலூர் அருகே, பட்டப்பகலில் விவசாயி வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 10 Jan 2020 4:00 AM IST (Updated: 10 Jan 2020 6:00 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் 20 பவுன் நகைகளை திருடர்கள் திருடிச்சென்றனர். இதுதவிர கோவிலிலும் அம்மனின் தாலியை திருடிச்சென்றனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள அம்மன்கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள்(வயது 55), விவசாயி. இவரது மனைவி சின்னபொண்ணு, மகள் சரிதா. இவர்கள் 3 பேரும் பகலில் வயல் வேலைக்கு சென்று இருந்தனர்.

மாலையில் அவர்கள் வீடு திரும்பியபோது வீட்டின் பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் 3 ஜோடி கொலுசுகள் திருட்டுப்போயிருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு மகே‌‌ஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விவசாயி அய்யம்பெருமாள் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வீட்டு ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு சென்றதும், இதனை நோட்டமிட்ட திருடர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சாவியை எடுத்து வீட்டை திறந்து நகைகள் மற்றும் கொலுசுகளை திருடிச்சென்று இருப்பதும் தெரியவந்தது.

இதேப்போல் திருக்கோவிலூர்-கடலூர் சாலையில் உள்ள கீழையூர் தாசர்புரத்தில் அம்மன்கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், அம்மனின் கழுத்தில் கிடந்த தாலி, தாலிகுண்டு ஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டனர்.

இதையடுத்து திருக்கோவிலூர் செவலைரோட்டில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகி பாண்டியன் மகன் வசந்த் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட முயன்று உள்ளனர். அங்கு ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்கவே திருடர்கள் வெறும் கையுடன் திரும்பி சென்றனர். இவரது வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டும் திருட்டுபோனது குறிப்பிடத்தக்கது.

இந்த 3 சம்பவங்கள் குறித்தும் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், உலகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருக்கோவிலூர் பகுதியில் நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story