நாகர்கோவிலில் பரிதாபம்: நடைமேடையில் ஸ்கூட்டர் மோதி நர்சு சாவு

நாகர்கோவிலில் நடைமேடையில் ஸ்கூட்டர் மோதி நர்சு பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நாகர்கோவில்,
தக்கலை மணலிக்கரை மணக்காவிளையை சேர்ந்தவர் ஜெயகுமார். இவருடைய மனைவி ஸ்டெல்லா ராணி (வயது 38), நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வேலைக்கு ஸ்கூட்டரில் வந்து செல்வது வழக்கம். இதே போல நேற்று காலையும் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டார். நாகர்கோவில், பார்வதிபுரம் பாலத்துக்கு கீழ் வந்தபோது முன்னால் சென்ற ஒரு வாகனத்தை அவர் முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது.
அப்போது ஸ்கூட்டர் நிலை தடுமாறி சாலையோரம் உள்ள நடைமேடையில் மோதியது. இந்த விபத்தில் ஸ்டெல்லா ராணி சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த சமயத்தில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்று கீழே விழுந்தது. இதனால் ஸ்டெல்லா ராணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தோடியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்க ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் ஸ்டெல்லா ராணி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி கோட்டார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்தில் ஸ்டெல்லா ராணி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story