கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமப்புறங்களில் போதைப்பொருட்கள் விற்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் - போலீஸ் அதிகாரி பேச்சு


கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமப்புறங்களில் போதைப்பொருட்கள் விற்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் - போலீஸ் அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 10 Jan 2020 10:30 PM GMT (Updated: 10 Jan 2020 5:00 PM GMT)

கிராமப்புறங்களில் போதைப்பொருட்கள் விற்பவர்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போதைப்பொருள் நுண்ணறிவுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஏ.டி.ராமச்சந்திரன் கூறினார்.

வேலூர், 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மூலம் தேர்வு செய்யப்பட்ட 45 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 40 நாள் நிர்வாக பயிற்சி முகாம் வேலூரில் நடந்து வருகிறது. இதில், தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறையினர் கலந்து கொண்டு ஒவ்வொரு நாளும் பயிற்சி அளித்து வருகின்றனர்.

அதன்படி வேலூர், திருவண்ணாமலை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் புலனாய்வுத்துறை சார்பில் நேற்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கிராமப்புற பகுதிகளில் போதைப்பொருட்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு வேலூர் தாசில்தார் சரவணமுத்து, ஓய்வுப்பெற்ற தடயஅறிவியல் உதவி இயக்குனர் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போதைப்பொருள் நுண்ணறிவுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஏ.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தங்களின் எல்லைக்கு உட்பட்ட கிராம மக்களுடன் எப்போதும் நல்ல தொடர்பு இருக்கும். எனவே அங்குள்ள சூழ்நிலை அனைத்தும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. கிராமப்பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பயிரிடப்பட்டிருந்தாலோ, கஞ்சா, கொகைன், ஒப்பியம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலோ அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கிராமப்புறங்களில் போதைப்பொருள் விற்பவர்கள் யார்? அவர்களுக்கு எங்கிருந்து போதைப்பொருட்கள் கிடைக்கிறது என்பது குறித்து தெரிய வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் யாருக்கும் தெரிவிக்கப்படாமல் ரகசியம் காக்கப்படும். போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களின் மூளை நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். எனவே போதைப்பொருள் பாதிப்பு குறித்து கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தடுப்பது குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Next Story