அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன்பெற சத்துணவு, அங்கன்வாடி பெண் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் பிரபாகர் தகவல்

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன்பெற சத்துணவு, அங்கன்வாடி பெண் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி,
அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் வாழும் மகளிர், பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்க உள்ளாட்சி அமைப்பு வாரியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தற்போது பயனாளிகளின் வசதிக்காக இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 18 வயது முதல் 40 வயது வரை என்றிருந்த வயது வரம்பினை 18 முதல் 45 வயது வரை என உயர்த்தி, அதிக அளவில் மகளிர் பயன்பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் மகளிரின் வருட வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாத அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், சுயமாக சிறு தொழில் செய்யும் பெண்கள், அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சமூக அடிப்படை நிறுவனங்கள், ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மாவட்ட மக்கள் கற்றல் மையம் ஆகிய நிறுவனங்களில் தொகுப்பூதியம், தினக்கூலி அல்லது ஒப்பந்த ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் பெண்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் ஆகியோர் இத்திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியுடையோர் என விரிவுப்படுத்தி திருத்திய உத்தரவு பெறப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின்கீழ் பயனடைய விரும்பும் தகுதிகளுடைய பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story