இலவச அரிசி விவகாரம்: மத்திய உள்துறை, கவர்னர் மீது ஐகோர்ட்டில் வழக்கு - நாராயணசாமி தகவல்


இலவச அரிசி விவகாரம்: மத்திய உள்துறை, கவர்னர் மீது ஐகோர்ட்டில் வழக்கு - நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 10 Jan 2020 11:30 PM GMT (Updated: 10 Jan 2020 8:27 PM GMT)

இலவச அரிசி விவகாரம் குறித்து மத்திய உள்துறை மற்றும் கவர்னர் மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற உடன் முதலில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எடுத்தோம். அதில் ஒன்று தான் ரேஷன்கார்டுகளுக்கு மாதம் 30 கிலோ அரிசி வழங்குவது. முதல் கட்டமாக மாதம் 20 கிலோ அரிசி வழங்க முடிவு செய்தோம்.

இதற்காக கடந்த 3½ ஆண்டுகளாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வருகிறோம். கடந்த 2015-ம் ஆண்டு ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்த போது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் பணம் வழங்கப்பட்டு வந்தது.

நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற உடன் மத்திய குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சரை சந்தித்து பணத்திற்கு பதிலாக அரிசியாக வழங்க வேண்டும் என்று கேட்டு கடிதம் அனுப்பினேன். இதனை கவர்னர் கிரண்பெடி தடுத்து நிறுத்தியுள்ளார். மத்திய மந்திரி அரிசி வழங்க தயாராக உள்ளார்.

இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தை சந்தித்து பேசினோம். அப்போது மத்திய உள்துறை அமைச்சகம் அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க வேண்டும் என்று கூறியது. மத்திய அரசின் இரு துறைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது.

எங்களை பொறுத்தவரை பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டும் என்பது தான் முக்கியம். புதுவை மாநிலத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பணத்திற்கு பதிலாக அரிசி தான் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். கவர்னர் கிரண்பெடி கிராமப்புற பகுதிக்கு சென்ற போது அங்குள்ள மக்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவரை திருப்பி அனுப்பி விட்டனர். நமது அண்டை மாநிலமான தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அரிசி தான் வழங்கப்படுகிறது.

மக்களின் தேவைகளை அறிந்து அதனை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தான் உள்ளது. இதனை தடுக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

புதுச்சேரி மாநில மக்களுக்கான நலத்திட்டங்களை தடுத்து வருகிறார். இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க நடவடிக்கை எடுத்த மத்திய உள்துறை, புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இன்று(நேற்று) எனது தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்தேன். அது வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

மத்திய அரசின் விதிமுறைகளின்படி செயல்படுவதாக கவர்னர் கிரண்பெடி கூறி வருகிறார். ஆனால் மத்திய அரசு நிதி பங்கீடு அளிக்க உத்தரவிட்டதை பின்பற்றவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகமும், கிரண்பெடியும் மதிப்பதில்லை. இலவச அரிசி வழங்க அனுமதி மறுப்பது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்ச கட்டமாகும்.

தேவைப்பட்டால் மத்திய அரசின் உத்தரவை கூட கவர்னர் கிரண்பெடி நிராகரிப்பார். தனக்கு வேண்டிய தேவநீதிதாசை மாநில தேர்தல் ஆணையராக நியமிக்க என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்கிறார். மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு. அவரை நீக்க கவர்னருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? அரசியலமைப்பை மீறி கிரண்பெடி எப்படி செயல்பட முடியும்? மாநில தேர்தல் ஆணையர் விவகாரத்தில் கவர்னர் கிரண்பெடி குறுக்கிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story