போதிய உறுப்பினர்கள் வாக்களிக்க வராததால் பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு


போதிய உறுப்பினர்கள் வாக்களிக்க வராததால் பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 11 Jan 2020 11:00 PM GMT (Updated: 2020-01-12T00:00:01+05:30)

போதிய உறுப்பினர்கள் வாக்களிக்க வராததால் பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழு மொத்தம் 15 உறுப்பினர்களை கொண்டதாகும். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் 7 இடங்களிலும், தி.மு.க.வினர் 6 இடங்களிலும், பா.ஜ.க. மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.

ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற 8 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அ.தி.மு.க. 7 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உள்ளதால், ஒன்றியக்குழு தலைவர் பதவி அ.தி.மு.க.வுக்கே உறுதியாக கிடைக்கும் என கூறப்பட்டது.

கடும் போட்டி

இந்த நிலையில் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்க அ.தி.மு.க. உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவியது. இதனால் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தலைவர் பதவியை பிடிக்க போட்டியில் உள்ளவர்களை அழைத்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஒன்றியக்குழு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று காலை திருச்சிற்றம்பலம் அருகே ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஒன்றிய கூட்ட மாளிகையில் தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் பேராவூரணி தாசில்தார் ஜெயலெட்சுமி முன்னிலையில் ஒன்றிய ஆணையர்கள் சடையப்பன், தவமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகே‌‌ஷ் மற்றும் அலுவலர்கள் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தேர்தல் ஒத்திவைப்பு

காலை 10 மணியளவில் தி.மு.க.வை சேர்ந்த 6 ஒன்றியக்குழு உறுப்பினர்களும், அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவரும் தேர்தல் நடைபெற இருந்த கூட்ட மாளிகைக்கு வந்திருந்தனர். அதே நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 6 பேரும், பா.ஜனதா மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் தலா ஒருவரும் என 8 பேர் தேர்தலில் பங்கேற்க வரவில்லை.

தலைவரை தேர்வு செய்ய போதிய எண்ணிக்கை இல்லாததால் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் அறிவித்தார். இதற்கான நோட்டீசும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. தேர்தல் நடைபெறாததால் அங்கு வந்திருந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் பிரச்சினைகள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி வழித்தடங்களில் சென்ற அனைத்து வாகனங்களும் காலை 9 மணி முதல் 12 மணி வரையில் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பேராவூரணி ஒன்றிய அலுவலக பகுதி முழுவதும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஒன்றியக்குழு தலைவர் யார்? என்பதை அறிந்து கொள்வதற்காக தேர்தல் நடந்த இடத்தில் காத் திருந்த அனைவரும், தேர்தல் நடைபெறாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Next Story