தர்மபுரி மாவட்டத்தில் 8 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது


தர்மபுரி மாவட்டத்தில் 8 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது
x
தினத்தந்தி 11 Jan 2020 11:00 PM GMT (Updated: 11 Jan 2020 6:56 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 8 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் தி.மு.க. வெற்றி பெற்றது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூர், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், மொரப்பூர் மற்றும் அரூர் ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களுக்கு கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கடந்த 6-ந்தேதி பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

இந்தநிலையில் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. அதன்படி தர்மபுரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த நீலாபுரம் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக தே.மு.தி.க.வை சேர்ந்த தம்பி ஜெய்சங்கர் தேர்வு செய்யப்பட்டார். நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவராக பா.ம.க.வை சேர்ந்த மகேஸ்வரி பெரியசாமியும், துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜேஸ்வரி பெரியண்ணனும் வெற்றி பெற்றனர்.

பென்னாகரம்-ஏரியூர்

இதேபோன்று பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவராக பா.ம.க.வை சேர்ந்த கவிதா ராமகிரு‌‌ஷ்ணன், துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த அற்புதம் அன்பு ஆகியோர் வெற்றி பெற்றனர். ஏரியூர் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பழனிசாமி, துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த தனபாலன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

பாலக்கோடு ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பாஞ்சாலை கோபால், துணைத்தலைவராக பா.ம.க.வை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். காரிமங்கலம் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சாந்தி பெரியண்ணன், துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கடத்தூர்

கடத்தூர் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த உதயா மோகனசுந்தரம், துணைத்தலைவராக பா.ம.க.வை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். அரூர் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பொன்மலர் பசுபதி, துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த அருண் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதன்மூலம் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.

தி.மு.க. வெற்றி

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த உண்ணாமலை வெற்றி பெற்றார். துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த அருணா இளஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் மாவட்டத்தில் ஒரே ஒரு ஊராட்சி ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. மொரப்பூர் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் தகராறு காரணமாகவும், தேர்தல் அலுவலர் மயங்கி விழுந்த காரணத்தினாலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழு தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகியோர் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் தர்மபுரி மாவட்ட அ,தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story