நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விலை சரிவு - விவசாயிகள் கவலை


நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விலை சரிவு - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 11 Jan 2020 10:15 PM GMT (Updated: 11 Jan 2020 7:04 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக பச்சை தேயிலை விலை சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மஞ்சூர், 

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்கி வருவது பச்சை தேயிலை விவசாயம் ஆகும். இந்த விவசாயத்தை நம்பி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு விவசாயிகளும், ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்களும் உள்ளனர். மாவட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும், தமிழக தொழில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான கூட்டுறவு தேயிலை தொழிற்சலைகளும் இயங்கி வருகின்றன.

விவசாயிகள் வினியோகம் செய்யப்படும் பச்சை தேயிலைக்கு கட்டபெட்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைஉள்பட பெரும்பாலான தேயிலை தொழிற்சாலைகளில் வாராந்திர விலை நிர்ணயமும், மற்ற 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் மாதாந்திர விலை நிர்ணயமும் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட சராசரி விலை நிர்ணயத்தை கருத்தில் கொண்டு மாதந்தோறும் அனைத்து தொழிற்சாலை மேலாண்மை இயக்குனர்கள் முன்னிலையில் குன்னூர் இன்கோ சர்வ் நிர்வாகம் சார்பில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர விலை கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அதன் விபரம் வருமாறு:-

மஞ்சூர், கைக்காட்டி ஆகிய கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 1 கிலோ பச்சை தேயிலை ரூ.12.50, சாலீஸ்பரி, குந்தா (எடக்காடு), பிதிர்காடுகூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் ரூ11.50, பிக்கட்டி, கரும்பாலம் பந்தலூர், பிராண்டியர் ஆகிய கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் ரூ.11, மேற்குநாடு, இத்தலார், மகாலிங்கா, நஞ்சநாடு, கிண்ணக்கொரை, எப்பநாடு ஆகிய கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் ரூ.10 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த மே மாதம் வரை அனைத்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளிலும், 1 கிலோ பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் ரூ.15 விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து விலை சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- பச்சை தேயிலை தொழில்தான் நீலகிரி மாவட்டத்தில் முதன்மை தொழிலாக உள்ளது. ஆனால் இதற்கு நிர்ணயம் செய்யப்படும் விலைதான் எங்களுக்கு போதுமானதாக இல்லை. கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.4 முதல் ரூ.5 வரை விலை குறைக்கப்பட்டு பெரும்பாலான கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 1 கிலோ பச்சை தேயிலைக்கு ரூ10 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலையை பெற்று கொண்டு 1 கிலோ பச்சை தேயிலைக்கு கூலி, உரமிடுதல் மற்றும் பராமரிப்பு செலவுக்கே இந்த விலை நிர்ணயம் ஈடாகிறது. அதனால் நாங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகிறோம். எனவே, தமிழக அரசு கட்டுப்படியான விலை கிடைக்கும் வரை குறைந்தபட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story