4 ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றிய தி.மு.க. மாவட்ட ஊராட்சி தலைவராக குன்னம் ராஜேந்திரன் தேர்வு


4 ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றிய தி.மு.க. மாவட்ட ஊராட்சி தலைவராக குன்னம் ராஜேந்திரன் தேர்வு
x
தினத்தந்தி 12 Jan 2020 4:30 AM IST (Updated: 12 Jan 2020 1:13 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. மாவட்ட ஊராட்சி தலைவராக குன்னம் ராஜேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலைவர், துணை தலைவர் மற்றும் 121 கிராம ஊராட்சிகளுக்கு துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி 8 வார்டுகளுக்கான தேர்தலில் 7 இடங்களில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தலை நடத்துவதற்காக கூட்டரங்கிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வந்தார். கூட்டரங்கில் மறைமுக தேர்தலுக்காக வாக்கு செலுத்துவதற்கு வாக்கு பெட்டியும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

மாவட்ட ஊராட்சி தலைவர்

இதையடுத்து கலெக்டர் சாந்தா மாவட்ட கவுன்சிலர்களை மட்டும் கூட்டரங்கில் இருக்க அனுமதித்தார், மற்றவர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினார். பின்னர் அவர் மாவட்ட ஊராட்சி தலைவருக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று மாவட்ட கவுன்சிலர்களிடம் தெரிவித்தார். ஆனால் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக மாவட்ட ஊராட்சி 5-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் மட்டும் கலெக்டர் சாந்தாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து கலெக்டர் சாந்தா மாவட்ட ஊராட்சி தலைவராக குன்னம் ராஜேந்திரன் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து குன்னம் ராஜேந்திரன் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். இதேபோல் நேற்று மதியம் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவராக மாவட்ட ஊராட்சி 3-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்தமிழ்ச்செல்வி மதியழகன் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம்

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்துவதற்காக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு பிரிவு) லதா தலைமையில், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ஆகியோர் தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு 2-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மீனா என்கிற மீனாம்மாள் அண்ணாதுரை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஆனால் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வரவில்லை. மேலும் மீனாம்மாளை எதிர்த்து போட்டியிடுவதற்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் லதா, மீனாம்மாள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து மீனாம்மாள் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதே போல் மதியம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பதவிக்கு 5-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாந்தாதேவி குமாரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

வேப்பூர்

வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்துவதற்காக ஊரக வளர்ச்சி முகமை (வீடு- சுகாதாரம்) திட்ட அலுவலர் நாகரத்தினம் மற்றும் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு 21-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரபா செல்லப்பிள்ளை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஆனால் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், ஒரு சுயேச்சை ஆகியோர் வரவில்லை. மேலும் பிரபா செல்லப்பிள்ளை எதிர்த்து போட்டியிடுவதற்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் நாகரத்தினம் பிரபா செல்லப்பிள்ளை போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து பிரபா செல்லப்பிள்ளை வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பேற்று கொண்டார். இதேபோல் மதியம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பதவிக்கு 7-வது வார்டில் தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வராணி வரதராசன் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

வேப்பந்தட்டை

வேப்பந்தட்டை ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் உமாமகேஸ்வரி தலைமையில், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இமயவரம்பன், அறிவழகன் ஆகியோர் முன்னிலை நடந்தது.

இதில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 2-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நூத்தப்பூர் ராமலிங்கம் ஒன்றிய தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் நூத்தப்பூர் ராமலிங்கம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தலைவராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் உமாமகேஸ்வரி அறிவித்தார். அதனை தொடர்ந்து நூத்தப்பூர் ராமலிங்கம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதே போல் மதியம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பதவிக்கு 1-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெங்கனூர் ரெங்கராஜ் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

ஆலத்தூரில்...

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளில் தி.மு.க. 9 வார்டுகளிலும், அ.தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஒரு வார்டிலும் வெற்றி பெற்றிருந்தது. இதனால் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளில் தி.மு.க., அ.தி.மு.க. சமநிலையில் இருந்தனர். இதனால் ஆலத்தூர் ஒன்றியத்தை யார் கைப்பற்றுவார்கள் என்று அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் நேற்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கூடியிருந்தனர். இதனால் அந்தப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பாடாலூர் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் அலுவலர் செந்தில்குமரன் தலைமையில், உதவி தேர்தல் அலுவலர் ஆலயமணி, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமி ஆகியோர் தயார் நிலையில் இருந்தனர். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 13 வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கிரு‌‌ஷ்ணமூர்த்தியும், அ.தி.மு.க. சார்பில் 17-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கர்ணன் ஆகியோர் மறைமுக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து மறைமுக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் 18 பேரும் வாக்களித்தனர்.

குலுக்கல் முறை

இதிலும் கிரு‌‌ஷ்ணமூர்த்தியும், கர்ணனும் தலா 9 வாக்குகள் பெற்றனர். இதனால் யார் வெற்றி பெற்றார்கள் என்று அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து 2 வேட்பாளர்களின் பெயர்களை சீட்டு எழுதிப்போட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 2 வேட்பாளர்கள் ஒப்புதல் படி குலுக்கல் நடந்தது. குலுக்கலில் எடுக்கப்பட்ட சீட்டில் கிரு‌‌ஷ்ணமூர்த்தி பெயர் இருந்தது. இதனால் கிரு‌‌ஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரும் பொறுப்பேற்று கொண்டார். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியதால், அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதனை தொடர்ந்து ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவருக்கான மறைமுக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.

அந்தப்பதவிக்கு தி.மு.க. சார்பில் 2-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரேசும், 7-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுசிலா முருகேசனும் போட்டியிட்டனர். இதிலும் 18 பேரும் வாக்களித்தனர். இதில் சுரேசும், சுசிலாவும் தலா 9 வாக்குகள் பெற்றனர். இதையடுத்து 2 வேட்பாளர்களின் பெயர்களை சீட்டு எழுதிப்போட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 2 வேட்பாளர்களின் ஒப்புதல் படி குலுக்கல் நடந்தது. குலுக்கலில் எடுக்கப்பட்ட சீட்டில் சுசிலா பெயர் இருந்தது. இதனால் சுசிலா முருகேசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தி.மு.க. கைப்பற்றியது

பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஒன்றிய தலைவர் பதவிகள் ஆகியவை கடந்த முறை அ.தி.மு.க. வசம் இருந்தது. தற்போது தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் அந்த 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. மாவட்ட ஊராட்சி தலைவர், 4 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவியை கைப்பற்றிய தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், விருந்தும் வைத்து கொண்டாடினர். மேலும் வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Next Story