பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு ரேஷன் கடையில் கூட்டநெரிசலால் பொதுமக்கள் தள்ளு முள்ளு


பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு ரேஷன் கடையில் கூட்டநெரிசலால் பொதுமக்கள் தள்ளு முள்ளு
x
தினத்தந்தி 11 Jan 2020 10:30 PM GMT (Updated: 11 Jan 2020 8:01 PM GMT)

கூடுவாஞ்சேரி அருகே உள்ள ரேஷன் கடையில் ஒரு நாள் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று ஊழியர் கூறியதால் குழப்பம் அடைந்த பொதுமக்கள் முண்டியடித்ததால் கூட்டநெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கன்னிவாக்கம், தர்காஸ், அண்ணாநகர், ஜெ.ஜெ.நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த 600 குடும்பத்தினர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு அறிவித்த ரூ.1000-த்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு ரேஷன் கடை முன்பு முதியோர்கள், பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் காலையில் இருந்து வரிசையில் காத்து கொண்டிருந்தனர்.

நாளை(திங்கட்கிழமை) வரை பொங்கல் பரிசு வழங்க அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், கடையை திறந்த ஊழியர் இன்று (அதாவது நேற்று) ஒரு நாள் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்துவிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஊழியர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள் தங்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற குழப்பத்தில் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு வரிசையில் முன்னேறினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் வரிசையில் நின்ற பெண்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் ரேணுகா என்ற பெண்ணை ஜெயந்தி என்பவர் பலமாக தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் ரேணுகா மயங்கி கீழே விழுந்ததால் ரேஷன் கடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை பின்னால் நின்று பார்த்து கொண்டிருந்த கலைச்செல்வி என்ற பெண், ரேணுகாவை தாக்கிய ஜெயந்தியை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயந்தி, கலைச்செல்வி கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுத்தார். இதனால் மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே ரேஷன் கடையில் ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் செய்யும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், பொாங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் வரிசையில் நின்ற பெண்களிடம் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து கடை ஊழியர் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து மயக்கம் அடைந்த ரேணுகாவை மீட்டு, ஆட்டோ மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ரேஷன் கடையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு, கைகலப்பு தொடர்பாக போலீசார் அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே எந்திரத்தில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

Next Story