மண்டபம் ஒன்றிய தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது


மண்டபம் ஒன்றிய தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 11 Jan 2020 10:30 PM GMT (Updated: 11 Jan 2020 8:24 PM GMT)

மண்டபம் ஒன்றிய தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. புதிய தலைவராக சுப்புலட்சுமி ஜீவானந்தம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பனைக்குளம்,

மண்டபம் யூனியனில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் 8-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக சபியாராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தி.மு.க. 10 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடத்திலும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பா.ஜ.க. ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து நேற்று ஒன்றிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் உச்சிப்புளியில் உள்ள மண்டபம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜ் தேர்தலை நடத்தினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் சபியாராணி மட்டும் கலந்து கொள்ளவில்லை. மற்ற 20 பேரும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.

தி.மு.க. வெற்றி

ஒன்றிய தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் சுப்புலட்சுமி ஜீவானந்தம், போட்டி வேட்பாளராக காளீசுவரி விசுவநாதன் ஆகியோரும், அ.தி.மு.க. சார்பில் பாதம்பிரியாள் என்பவரும் போட்டியிட்டனர். இதில் சுப்புலட்சுமி ஜீவானந்தம் 10 வாக்குகளும், பாகம்பிரியாள் 8 வாக்குகளும், காளீசுவரி விசுவநாதன் 2 வாக்குகளும் பெற்றனர்.

ஆனால் விதிமுறைகளின்படி வெற்றி பெறுவதற்கு மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். இதையடுத்து 3-ம் இடத்தை பிடித்தவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு 2-வது முறையாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் 11 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் பாதம்பிரியாள் 9 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து தி.மு.க.வை சேர்ந்த சுப்புலட்சுமி ஜீவானந்தம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

துணை தலைவர்

அவருக்கு ஒன்றிய ஆணையாளர் சேவுகப்பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜ், மற்றும் கவுன்சிலர்கள், யூனியன் மேலாளர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சுப்புலட்சுமி ஜீவானந்தம் புதிய ஒன்றிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதேபோல நேற்று பிற்பகலில் ஒன்றிய துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க.வை சேர்ந்த பகவதி லட்சுமி 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story