பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் விளைவித்த கரும்பு அறுவடை - டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் விளைவித்த கரும்பு அறுவடையை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 1,400-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறை வளாகத்தில் சுமார் 25 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் பயிரிடப்படுகிறது. 100 முதல் 150 நன்னடத்தை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விவசாய பணிகளை செய்து வருகிறார்கள்.
சிறை வளாகத்தில் விளையும் பயிர்கள், அங்கு சிறை அங்காடியில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 25 சென்ட் நிலப்பரப்பில் கரும்பு பயிரிடப்பட்டது. அந்த கரும்புகள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.
அந்த கரும்பு அறுவடை செய்யும் பணியை மதுரை சரக சிறைத்துறை டி.ஜ.ஜி. பழனி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைதிகள் விளைவித்த கரும்புகள் அறுவடை செய்யப்படுகிறது. சிறையில் உள்ள கைதிகளுக்கு தலா ஒரு கரும்பு வழங்கப்படும். மீதமுள்ள கரும்புகள் சிறை வளாகம் நுழைவுவாயிலில் உள்ள சிறை அங்காடியில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். கரும்பின் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். மேலும், மஞ்சள் குலை, பனங்கிழங்கு ஆகியவையும் விளைவிக்கப்பட்டு உள்ளது. அவையும் அறுவை செய்யப்படுகின்றன. இங்கு விளையும் காய்கறிகள் சிறை பயன்பாட்டுக்கு போக மீதமுள்ளவை சிறை அங்காடியில் வைத்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது பாளையங்கோட்டை மத்திய சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பாளையங்கோட்டை சிறை அருகே சிறைத்துறை அலுவலர்களின் குடியிருப்பு உள்ளது. அங்கு கோலப்போட்டி நடந்தது. அதை டி.ஐ.ஜி. பழனி பார்வையிட்டார். சிறந்த கோலங்களுக்கும், சிறந்த முறையில் வீடுகளை பராமரிப்பவர்களுக்கும் சிறைத்துறை சார்பில் பரிசு வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story