பெங்களூருவில் பயங்கரம்: முன்விரோதத்தில் ரவுடி குத்திக் கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பெங்களூருவில் பயங்கரம்: முன்விரோதத்தில் ரவுடி குத்திக் கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Jan 2020 10:30 PM GMT (Updated: 12 Jan 2020 6:30 PM GMT)

பெங்களூருவில் முன் விரோதத்தில் ரவுடி குத்திக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு, 

பெங்களூரு ஜே.ஜே.நகர் பழைய குட்டதஹள்ளி அருகே வசித்து வந்தவர் சுகேப் பாட்ஷா. ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன. நேற்று முன்தினம் அதிகாலையில் சுகேப் பாட்ஷா வெளியே சென்றுவிட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சுகேப் பாட்ஷாவை வழிமறித்தார்கள்.

பின்னர் அந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுகேப் பாட்ஷாவை சரமாரியாக குத்தினார்கள். இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் ஓடிவிட்டார்கள். உயிருக்கு போராடிய சுகேப் பாட்ஷாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுகேப் பாட்ஷா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் ஜே.ஜே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினார்கள். சுகேப் பாட்ஷா ரவுடி என்பதாலும், அவர் மீது ஏராளமான வழக்குகள் இருந்ததாலும், முன்விரோதம் காரணமாக அவரை எதிர்கோஷ்டியை சேர்ந்த ரவுடிகள் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனாலும் சுகேப் பாட்ஷாவை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்பது தொியவில்லை. இதுகுறித்து ஜே.ஜே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story