மளிகை கடையில் நூதன முறையில் திருடிய கும்பல் - போலீசார் வலைவீச்சு
மளிகை கடையில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் திருடிய வெள்ளை சட்டை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர் பர்வீனா பானு(வயது 40). இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், கடையில் வியாபாரம் முடிந்து கணக்கு வழக்குகளை சரிபார்த்த போது விற்பனையான பொருட்களும், பணமும் குறைவாக இருந்தது.
இதனால் சந்தேகத்தின் பேரில் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் அவரது கடைக்கு வெள்ளை சட்டை அணிந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பணம் கொடுத்து பொருட்கள் வாங்குவது போல் நடித்து அவரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் திருடி சென்றுவிட்டது தெரிந்தது.
அவரது கடைக்கு வெள்ளை சட்டை அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் அடுத்தடுத்து வந்து பொருட்களை வாங்கினர். முதலில் வந்தவர், சோப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கிவிட்டு 500 ரூபாயை கொடுத்து சில்லறை வாங்குகிறார்.
பின்னர் 2-வது நபர் பொருட்களை வாங்கிவிட்டு அவரும் 500 ரூபாயை நீட்டுகிறார். அதற்குள் முதலில் பொருட்கள் வாங்கிய நபர், அந்த பெண் கொடுத்த சில்லறையில் 200 ரூபாய் நோட்டு கிழிந்திருப்பதாக கூறி, அவரது கவனத்தை திசை திருப்புகிறார்.
அந்த நேரத்தில் 500 ரூபாய் நோட்டுடன் நின்ற நபர் பணத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு தான் 500 ரூபாயை கொடுத்துவிட்டதாக கூறி, பணம் கொடுக்காமலேயே பொருளையும், மீதி சில்லறையையும் வாங்கிச்செல்கிறார்.
பின்னர் 3-வது நபர் தான் வாங்கிய கோதுமை மாவு பாக்கெட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுக்கிறார். அப்போது 4-வது நபர், ரூ.200-க்கு சில்லரை தரும்படி நீட்டுகிறார்.
உடனேஅந்த நபர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை சட்டைபையில் வைத்துக்கொண்டு தான்பணம் கொடுத்து விட்டதாக கூறி கோதுமை மாவையும், மீதி பணத்தையும் வாங்கி செல்கிறார்.
வெள்ளை சட்டை அணிந்த 4 பேரும் ஒரே நேரத்தில் வந்து அடுத்தடுத்து பணம் கொடுப்பதும், வாங்குவதுமாக பெண்ணின் கவனத்தை திசை திருப்பி பொருட்களையும், பணத்தையும் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. சந்தேகம் வராமல் இருக்க அனைவரும் ஒரே மாதிரி வெள்ளை சட்டை அணிந்து வந்துள்ளனர். மர்ம கும்பலை மாங்காடு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story