புளிய மரத்தில் கார் மோதி விபத்து: அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உள்பட 2 பேர் பலி


புளிய மரத்தில் கார் மோதி விபத்து: அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 Jan 2020 4:30 AM IST (Updated: 13 Jan 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பவ் என்கிற வெங்கடேசன் (வயது 31). இவர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் அ.தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணை தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுதலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வினருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக்கூறி எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் வெங்கடேசன், சென்னைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் வழிஅனுப்பி வைத்து விட்டு காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு வந்து கொண்டிருந்தார். காரை இடையப்பட்டியை சேர்ந்த செல்வம் (38) ஓட்டினார். நேற்று அதிகாலை அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி வீரபெருமாள்பட்டி சாலையில் வந்தபோது, கார் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் காரில் இருந்த அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசன், டிரைவர் செல்வம் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கும், டிரைவர் செல்வம் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசனின் தாயார் இந்திராஅம்மா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story