பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை பெரியகோவில் சன்னதி கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசும் பணி


பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை பெரியகோவில் சன்னதி கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசும் பணி
x
தினத்தந்தி 13 Jan 2020 4:30 AM IST (Updated: 13 Jan 2020 1:02 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரியகோவிலில் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி பெரியகோவிலில் உள்ள சன்னதிகளின் கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசும் பணி நடந்து வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வரும் இந்த கோவிலில் கடந்த 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் 23 ஆண்டுகளுக்குப்பிறகு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோவிலில் தொல்லியல்துறை, இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாலாலயம்

பெரியகோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, ரசாயன கலவை மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் வருகிற 27-ந் ே-திக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அன்று பூர்வாங்க பூஜைகளும் நடைபெறுகிறது.

இதையொட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி பாலாலயம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்காக பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜைக்கு பந்தல் அமைக்கப்பட்டு யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெரியகோவிலில் உள்ள பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளின் கோபுரங்கள் மற்றும் விமான கோபுரத்தில் இருந்த கலசங்கள் இறக்கப்பட்டு, சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

தங்கமுலாம் பூசும் பணி

தற்போது சுத்தப்படுத்தும் பணிகள் முடிந்து கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசும் பணி நடந்து வருகிறது. மதுரையை சேர்ந்த செல்வராஜ் ஆசாரி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கோபுர கலசங்களை வற்றாத ஜீவநதியில் இருந்து எடுத்து வரப்பட்ட சந்திரகாந்த கல்லைக்கொண்டு சுத்தப்படுத்தப்படுகிறது.

இந்த கல்லை வைத்து சுத்தம் செய்தால் கலசங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மேலும் ஏற்கனவே கலசங்களில் தங்கமுலாம் பூசப்பட்டு இருப்பதால் அதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த கல்லைக்கொண்டு சுத்தப்படுத்துவதால் அதன் பொலிவு மேலும் அதிகரிக்கும் என இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.

25-ந் தேதி முடிவடையும்

இது குறித்து கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள செல்வராஜ் ஆசாரி கூறுகையில், “தங்க முலாம் பூசுவதற்காக வட்ட வடிவில் இரும்பினால் ஆன உலோகத்தின் உட்பகுதியில் தார் பூசப்படுகிறது. பின்னர் அதில் சுத்தமான தங்கத்தை பொட்டாஷியம் பெரோசைடு மூலம் உருக்கி அதன்பிறகு தண்ணீரில் கலக்கப்படுகிறது. அந்த தண்ணீரில் கலசத்தை சுற்றிலும் செம்பு கம்பிகள் கட்டி அதில் சிறிய அளவிலான மின்சார பேட்டரி மூலம் மின் இணைப்பு கொடுத்து மின்பகுப்பு முறை மூலம் தங்க முலாம் பூசப்படுகிறது.

மன்னர்கள் காலத்தில் எந்த முறையில் கலசங்கள் சுத்தப்படுத்தப்பட்டு மாட்டப்பட்டதோ? அதே முறையில் தான் தற்போதும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் வருகிற 25-ந் ே-திக்குள் முடிக்கப்படும்” என்றார்.


Next Story