பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் கலெக்டர் ராமன் பேச்சு


பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் கலெக்டர் ராமன் பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2020 11:00 PM GMT (Updated: 12 Jan 2020 7:59 PM GMT)

பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மேட்டூரில் நடந்த சித்த மருத்துவ தின விழாவில் கலெக்டர் ராமன் பேசினார்.

மேட்டூர்,

மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் சார்பில் 3-வது தேசிய சித்த மருத்துவ தின விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. செம்மலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த சித்த மருத்துவ மூலிகை கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

விழாவில் கலெக்டர் ராமன் பேசியதாவது:-

சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழமைவாய்ந்த மருத்துவ முறை சித்த மருத்துவ முறையாகும். ஆனால் அந்த முறையை நாம் மறந்துவிட்டோம். இயற்கையோடு நாம் இணைந்து வாழ்வதை நாம் மறந்து செயற்கையாக வாழ்ந்து வருவதால் தான் பல்வேறு நோய்தாக்கம் ஏற்படுகிறது. நாம் இயற்கையோடு வாழ்வதை ஏற்று சித்த மருத்துவ முறைகளை பின்பற்றி உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றி கொள்ள வேண்டும்.

பாரம்பரிய உணவுகள்

இன்றைய சூழலில் மக்களை அல்லல் படுத்தும் பல்வேறு நோய்களுக்கு, உணவு முறைகளே காரணம். எனவே, பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, சித்த மருத்துவம் குறித்தும், பாரம்பரிய உணவுகளை சாப்பிடுவதால் அதன்மூலம் ஏற்படும் நன்மைகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இங்கே பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் ராமன் பேசினார்.

புதிய கருவி

முன்னதாக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரின் வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6½ லட்சம் மதிப்பீட்டில் ரத்த அணுக்கள் கண்டறியும் புதிய கருவியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மேட்டூர் சப்-கலெக்டர் சரவணன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி, சுகாதாரத்துறை அதிகாரிகள் வளர்மதி, சாந்தி, நிர்மல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story