கூடங்குளம் முதலாவது அணுஉலையில் பழுது; 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்


கூடங்குளம் முதலாவது அணுஉலையில் பழுது; 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Jan 2020 4:30 AM IST (Updated: 13 Jan 2020 1:40 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் முதலாவது அணுஉலையின் வால்வில் பழுது ஏற்பட்டதால் நேற்று அந்த உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் மூலம் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம், 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யநாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் முதல் அணுஉலையில் கட்டுமான பணிகள் முடிவடைந்து, கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் முதல் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு முதல் இந்த அணுஉலையில் வணிகரீதியான மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மத்திய தொகுப்பில் இணைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 5.55 மணிக்கு அணுஉலையின் வால்வில் திடீரென பழுது ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இன்னும் ஓரிரு நாட்களில் வால்பு பழுது நீக்கப்பட்டு மின்உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என்று அணு மின்நிலைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே பராமரிப்பு பணிக்காக 2-வது அணுஉலையின் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் கூடங்குளத்தில் 2 அணுஉலைகளிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

Next Story