திருவள்ளூர் அருகே, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி - கணவன், மனைவி கைது
திருவள்ளூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவரது மனைவி ரம்யா (28). இவர் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். கணவன், மனைவி இருவரும் தீவிரமாக அரசு வேலை தேடி வந்தனர். இந்த நிலையில் ரம்யா அரசு வேலை தேடுவதை அறிந்த திருப்பூர் மாவட்டம், விஜயபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (38), அவரது மனைவி ராஜி என்கின்ற ராஜலட்சுமி (35) இருவரும் தங்களுக்கு பல அரசு உயர் அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலம் ரம்யாவுக்கு அரசு வேலை பெற்று தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
மேலும் அவர்கள் ரம்யாவுக்கு கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள சுகாதார மருத்துவ மனையில் கம்ப்யூட்டர் உதவியாளர் வேலைக்கும், அவரது கணவரான கார்த்திக்குக்கு பொதுப்பணித்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாகவும் உறுதியளித்தனர். அதற்கு தங்களுக்கு ரூ.4 லட்சம் கொடுத்தால் உடனடியாக வேலை வாங்கி தருவதாக கணவன், மனைவி இருவரும் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ரம்யா கடந்த 2018-ம் ஆண்டு ரூ.4 லட்சத்தை மணிகண்டனிடம் கொடுத்தார்.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட மணிகண்டன் தான் தெரிவித்தது போல் ரம்யா மற்றும் கார்த்திக்குக்கு அரசு வேலை வாங்கித்தராமல் காலம் தாழ்த்தி வந்தார். பணம் கொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு அரசு வேலை கிடைக்காததால் ரம்யா பலமுறை மணிகண்டனை தொடர்பு கொண்டு தங்களுக்கு வேலை பெற்று தருமாறு கூறி உள்ளார்.
அதற்கு கணவன், மனைவி இருவரும் சரியான பதில் சொல்லாமலும், அவர்களது பணத்தை திருப்பி கொடுக்காமலும் தலைமறைவாகி விட்டனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரம்யா நடந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மணிகண்டன் மற்றும் ராஜலட்சுமியை தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் இருவரையும் போலீசார் திருப்பூர் அருகே கைது செய்து திருவள்ளூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story