கறவை மாடு வாங்க உடனடியாக வங்கி கடன் பெற்றுத்தரப்படும் - சோளிங்கர் சம்பத் எம்.எல்.ஏ.தகவல்
பால் உற்பத்தியாளர்கள் 4,525 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கறவை மாடு வாங்க உடனடியாக வங்கி கடன் பெற்றுத்தரப்படும் என்று சோளிங்கர் சம்பத் எம்.எல்.ஏ.தகவல் தெரிவித்துள்ளார்.
சோளிங்கர்,
சோளிங்கர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா சங்க அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பால் கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க ஒன்றிய தலைவர் வேலு அழகன், வேலூர் பால்வளத் துணைப்பதிவாளர் ராமச்சந்திரன், வேலூர் ஆவின் பொது மேலாளர் கணேசா, உதவி பொது மேலாளர் கோதண்டராமன், சோளிங்கர் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஏ.எல். விஜயன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் எஸ்.நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சார்பதிவாளர் ஜெயவேலு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் ஜி.சம்பத் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பால் உற்பத்தியாளர்கள் 4ஆயிரத்து 525 பேர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ34 லட்சத்தை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுக்கு யார் கடன் கேட்டாலும் இந்தியன் வங்கியின் மூலமாக மானியத் தொகையோடு கடன் பெற்று தரப்படும். கறவை மாடுகளுக்கு கடன் வேண்டுவோர் சங்கத்தில் பதிவு செய்து விண்ணப்பம் பூர்த்தி செய்து உடனடியாக விண்ணப்பத்தைக் கொடுத்து கடனைப் பெற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க, நகர செயலாளர் ராமு, காவேரிபாக்கம் ஒன்றிய செயலாளர் பழனி, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் மணிகண்டன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் வெங்கடேசன் வேலு, பரவத்தூர் முன்னாள் தலைவர் சதீஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மேலாளர் பழனி நன்றி கூறினார்.