காரமூலா கிராமத்தில் தார்சாலை அமைக்க வேண்டும் - கலெக்டரிடம் ஆதிவாசி மக்கள் மனு


காரமூலா கிராமத்தில் தார்சாலை அமைக்க வேண்டும் - கலெக்டரிடம் ஆதிவாசி மக்கள் மனு
x
தினத்தந்தி 14 Jan 2020 3:45 AM IST (Updated: 14 Jan 2020 12:05 AM IST)
t-max-icont-min-icon

காரமூலா கிராமத்தில் தார்சாலை அமைக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி, பந்தலூர் அருகே காரமூலா கிராமத்தை சேர்ந்த ஆதிவாசி மக்கள் தார்சாலை அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட காரமூலா கிராமத்தில் ஆதிவாசி மக்களான நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு திட்டங்கள், முதியோர் உதவித்தொகை, சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுவரை யாருக்கும் பட்டா வழங்கப்படாமல் உள்ளது.

இப்பகுதிக்கு சாலை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வரவும், நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வந்தோம்.

இந்தநிலையில் எங்கள் கிராமத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் ஒருசில காரணங்களுக்காக இந்த பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் வருகிற மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறினால் செல்வதற்கு சிரமமாக இருக்கும். எனவே, அமைக்கப்படும் சாலையை தார்சாலையாக அமைக்க வேண்டும். மேலும், மாவட்ட கலெக்டர் எங்கள் கிராமத்தில் ஆய்வு செய்து, தேவைப்படும் இடங்களில் தடுப்புச்சுவர் அமைத்து சாலை பணி தரமாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி அருகே முட்டிநாடு கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- முட்டிநாடு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு பஸ் வசதி இல்லாததால் வெளியிடங்களுக்கு சென்று வர இயலவில்லை. இதனால் அறுவடை செய்த மலைக்காய்கறிகளை ஊட்டியில் ஏலம் மூலம் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து சென்று வருகிறார்கள். ஆகவே, கிராமத்துக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story