மாவட்ட செய்திகள்

போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் புதுவை -கடலூர் சாலையில் தொடர் விபத்து - நடவடிக்கை எடுக்க அரசுக்கு வேண்டுகோள் + "||" + Due to the lack of traffic police Pondicherry katalur series of road accident Request the Government to take action

போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் புதுவை -கடலூர் சாலையில் தொடர் விபத்து - நடவடிக்கை எடுக்க அரசுக்கு வேண்டுகோள்

போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் புதுவை -கடலூர் சாலையில் தொடர் விபத்து - நடவடிக்கை எடுக்க அரசுக்கு வேண்டுகோள்
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் புதுவை- கடலூர் சாலையில் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க கூடுதல் போலீசாரை நியமிக்க அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாகூர்,

புதுச்சேரியில் போக்குவரத்து காவல் துறைக்கு தனி பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, என 4 காவல் நிலையம் உள்ளது. இதில் தெற்கு காவல் நிலையத்தில் போக்குவரத்து சரி செய்ய 7 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்கள் சுழற்சி முறையில் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தெற்குப் பகுதி போக்குவரத்து போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரையாம்புத்தூர், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்து வருகின்றன. இதில் போக்குவரத்தை சரி செய்ய முக்கிய இடங்களான அரியாங்குப்பம், தவளகுப்பம் ஆகிய இடங்களில் மட்டுமே போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர்.

இதனால் மற்ற கிராமங்களில் உள்ள முக்கிய சந்திப்புக்கு போக்குவரத்து போலீசார் செல்ல முடியவில்லை. சட்டம்- ஒழுங்கு பிரிவில் 40க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். ஆனால் போக்குவரத்து காவல் நிலையத்தில் 10க்கும் குறைவான போலீசார் மட்டுமே உள்ளனர். இதனால் விபத்து ஏற்பட்டால் ஒரு போலீஸ்காரர் மட்டுமே விபத்து நடந்த இடத்திற்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் விபத்து ஏற்பட்ட இடத்தில் போக்குவரத்து போலீசார் இல்லை என்றால் அங்கு சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.

மேலும் கிராமப்புறங்களில் திடீர் விபத்து ஏற்பட்டால் போக்குவரத்து போலீசார் வருவதற்கு தாமதம் ஆகிவிடுவதால் அதனாலும் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் விபத்து குறித்து சரியான தகவல்களை கண்டறிய முடியாமல் போக்கு வரத்து போலீசார் தவித்து வருகின்றனர். பல சம்பவங்களில் விபத்தை ஏற்படுத்திய நபர் மற்றும் வாகனத்தை கண்டுபிடிக்கவே முடியாத நிலையும் உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு 295, 2018ல் 310, கடந்த ஆண்டு 2019-ல் 273, இந்த ஆண்டு அதாவது கடந்த 13 நாட்களில் 6 என விபத்து வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் பல்வேறு வழக்குகள் சமரச நடவடிக்கை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன.

இதன் உச்சமாக நேற்று முன்தினம் புதுவை-கடலூர் சாலையில் கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி வாலிபர் படுகாயமடைந்தார். அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவை-கடலூர் சாலையில் அதிவேகமாக தனியார் பேருந்துகளை இயக்குவதால் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற வாகனங்களை போலீசார் கண்காணித்து அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தடுப்பு கட்டைகளில் பிரதிபலிப்பான் ஒட்ட வேண்டும். இரு வழி சாலையை முழுவதுமாக நீட்டிக்க வேண்டும். போக்குவரத்தை சீரமைக்க தெற்குப் பகுதிக்கு போக்குவரத்து போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை, அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விபத்தில் இறந்தவர்களை கொண்டு செல்ல போக்குவரத்து துறை போலீசாருக்கு தனியாக ஒரு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. அதற்கு இன்று வரை டிரைவர் நியமிக்கப்படவில்லை. விபத்து ஏற்பட்ட வாகனத்தை எடுத்துச் செல்ல கிரேனும் காவல் நிலையத்தில் உள்ளது. அதற்கும் டிரைவர் நியமிக்கப்படவில்லை. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் கிரேன் பல வருடங்களாக வீணாகி வருகிறது.

விபத்துகளை தடுக்க அரசு போக்குவரத்து துறைக்கு என்னென்ன உபகரணங்கள் தேவை என்பதை அறிந்து அவற்றை வழங்க வேண்டும். போக்குவரத்து காவல் நிலைத்தில் பற்றாக்குறையாக உள்ள இடங்களை நிரப்ப அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி கிராமப் புறங்களில் கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.