திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்
திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது.
திண்டுக்கல்,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வது சிறப்பு ஆகும். இதையொட்டி போகி பண்டிகையான நேற்று மக்கள் வீடுகளை சுத்தம் செய்தனர்.
அதோடு பொங்கல் பண்டிகை பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டினர். இதற்காகவே திண்டுக்கல்லில் காந்தி மார்க்கெட், தாலுகா அலுவலக சாலை, கடைவீதி, மெயின்ரோடு, நாகல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை நடைபெற்றது.
பொங்கல் பண்டிகை தினத்தில் பாரம்பரியத்தின்படி மண் பானையில் பொங்கல் வைப்பது வழக்கம். அதன்படி பெரும்பாலான மக்கள் புதிய மண் பானைகளை வாங்கி சென்றனர். ஒருசிலர் வெண்கல பானைகளையும் வாங்கினர். இதனால் மண்பானை, பாத்திர கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், நெய் மட்டுமின்றி பூஜை பொருட்களை வாங்குவதற்கு பலசரக்கு கடைகளில் மக்கள் குவிந்தனர். இதனால் பொங்கல் பொருட்களின் விலை நேற்று கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.
மேலும் பொங்கல் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கரும்பு தான். இந்த கரும்பு திண்டுக்கல் நகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விற்பனை ஆனது. வியாபாரிகள் மட்டுமின்றி விவசாயிகளே கரும்புகளை வயலில் இருந்து அறுவடை செய்து நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
இதற்காக நேற்று முன்தினம் இரவே சாலையோரங்களில் கரும்பு கடைகளை அமைத்தனர். பொங்கல் வழிபாட்டுக்கும், புதுமண தம்பதிகளுக்கு சீதனமாக கொடுப்பதற்கும், பொங்கல் நாளில் தின்பதற்கும் கரும்புகளை மக்கள் வாங்கினர். இதில் பெரும்பாலான மக்கள் கரும்புகளை கட்டுகட்டாக வாங்கி சென்றனர்.
இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கட்டு ரூ.250-க்கு விற்ற கரும்பு நேற்று கட்டு ரூ.400 வரை விற்பனை ஆனது. இதுதவிர மஞ்சள் குலைகள், வீட்டின் கூரையில் கட்டப்படும் கூரைப்பூ ஆகியவற்றையும் மக்கள் வாங்கினர். இதில் 2 மஞ்சள் குலைகள் ரூ.25-க்கும், கூரைப்பூ ஒரு கட்டு ரூ.5-க்கும் விற்பனை ஆனது.
இதுதவிர பொங்கல் பண்டிகையை கொண்டாட புத்தாடைகள் வாங்குவதற்கு ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் வழக்கமான நாகரிக ஆடைகளை தவிர்த்து ஆண்கள் வேட்டி-சட்டையும், பெண்கள் சேலைகளும் வாங்கினர். அதில் இளம்பெண்கள் கூட சேலைகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பொங்கல் பொருட்களை வாங்குவதற்காக திண்டுக்கல் நகர் மட்டுமின்றி கிராமங்களை சேர்ந்த மக்களும் திண்டுக்கல்லுக்கு வந்தனர். இதனால் திண்டுக்கல் நகரில் பொங்கல் பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது. மெயின்ரோடு, கடைவீதி, மேற்கு மற்றும் கிழக்கு ரதவீதி, நாகல்நகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story