புதிய வீட்டில் குடியேறிய சிறிது நேரத்தில் கள்ளக்காதல் தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை; வாலிபர் கைது
வேலூரில் கள்ளக்காதல் தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்,
வேலூர் கன்சால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பரத் (வயது 36), ஆட்டோ டிரைவர். சாரதிமாளிகை ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவராகவும் இருந்தார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பரத் புதிதாக வீடுகட்டி வந்தார். இந்த வீட்டு வேலை முடிந்து நேற்று முன்தினம் புதிய வீட்டில் குடியேறினார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவர் சேண்பாக்கம் பெரியார் நகர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அதேப் பகுதியை சேர்ந்த மைக்கேல் (27) என்பவருக்கும், பரத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பரத் அங்கிருந்து சென்றார். ஆனாலும் ஆத்திரம் அடைந்த மைக்கேல் பின்தொடர்ந்து சென்று இரும்பு கம்பியால், பரத்தின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பரத் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்துசென்று விசாரணை நடத்தினர். மேலும் பரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பரத்தை கொலை செய்ததாக மைக்கேலை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–
மைக்கேலுக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அந்த பெண்ணின் மகளுடன், கொலை செய்யப்பட்ட பரத்துக்கு தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட தகராறில் பரத் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த 13–ந் தேதி வேலூர் சைதாப்பேட்டையில், தோட்டப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அய்யப்பன் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கள்ளக்காதல் தகராறில் மேலும் ஒரு ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.