திருவள்ளுவர் தினவிழா கொண்டாட்டம்
தேனி, வீரபாண்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திருவள்ளுவர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
உப்புக்கோட்டை,
உலக பொதுமறை திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2-ந்தேதி திருவள்ளுவர் தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வீரபாண்டியில் உள்ள திருவள்ளுவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களால் திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அவர்கள் மாலை அணிந்து ஒருவாரம் விரதமிருந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. பிறகு முல்லைப் பெரியாற்று கரையில் உள்ள கண்ணீஸ்வரமுடையார் கோவில் முன்பு பால்குடங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, மண்டபத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆண்டிப்பட்டி சீனிவாசன் நகரில் இந்து முன்னணி சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நிர்வாகிகள் திருவள்ளுவர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேனி அருகே நாகலாபுரத்தில் திருவள்ளுவர் மன்றத்தின் சார்பில் திருவள்ளுவர் தினவிழா மற்றும் மன்றத்தின் ஆண்டு விழா நடந்தது. விழாவில் சிறுவர், சிறுமிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கபடி போட்டி, பட்டிமன்றம், திருக்குறள் கருத்தரங்கு, திருப்பாவை முற்றோதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவுக்கு திருவள்ளுவர் மன்ற செயலாளர் இளங்குமரன் தலைமை தாங்கினார். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், தேவாரம் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த 4 வயது சிறுமி ரோசிணி 400 திருக்குறள்கள் ஒப்புவித்து முதலிடம் பிடித்தாள்.
அந்த சிறுமியின் இரட்டை சகோதரிகளான சாலினி, சாமினி ஆகியோர் திருப்பாவை முற்றோதல் செய்தனர். விழாவில், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் பொதுமக்கள் சார்பில் திருவள்ளுவர் தின விழா நடந்தது. விழாவில், திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. சிறுவர், சிறுமிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story