ஈரோட்டில் காணும் பொங்கல் விழா: வ.உ.சி. பூங்காவில் ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்தனர்


ஈரோட்டில் காணும் பொங்கல் விழா: வ.உ.சி. பூங்காவில் ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 17 Jan 2020 10:15 PM GMT (Updated: 17 Jan 2020 6:47 PM GMT)

காணும் பொங்கல் விழாவையொட்டி ஈரோடு வ.உ.சி. பூங்காவில் ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்தனர். அவர்கள் நடனம்ஆடி உற்சாகமாக விழாவை கொண்டாடினர்.

ஈரோடு,

பொங்கல் பண்டிகையின் 3-வது நாளான நேற்று காணும் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வாசல் பொங்கல், மாட்டுப்பொங்கல் எனப்படும் பட்டிப்பொங்கல் என வீடு தோட்டம் என்று பொங்கல் வைத்து கொண்டாடிய மக்கள் நண்பர்கள், உற்றார் உறவினர்களை சந்திக்கும் வகையில் நேற்று காணும்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ஈரோட்டில் வ.உ.சி.பூங்கா மைதானத்தில் காணும் பொங்கலையொட்டி நேற்று நண்பகல் 12 மணியில் இருந்தே பொதுமக்கள் வரத்தொடங்கினார்கள். ஆனால், காணும் பொங்கல் விழாவுக்கு வ.உ.சி.பூங்காவில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் ஆண்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

பூங்காவின் நுழைவு வாயில் பகுதியிலேயே ஆண்கள், 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் உள்ளே செல்ல போலீசார் தடை விதித்தனர். எனவே பூங்காவில் பெண்கள் மற்றும் சிறுவர் -சிறுமிகள் மட்டுமே இருந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் பூங்காவில் கணிசமான பெண்கள் குவிந்தனர்.

மாலை 5 மணி அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பூங்காவில் குவிந்தனர். ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் தமிழர் பண்டிகையை கொண்டாடும் உற்சாகத்தில் பெண்கள் இருந்தனர். கரும்பு, நொறுக்கு தீனிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை கொண்டு வந்து தங்கள் தோழிகள், உறவு பெண்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

பூங்காவுக்குள் வந்ததும் தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்து உட்கார்ந்து கொண்டு தங்களுக்கு தெரிந்தவர்கள், தோழிகளுக்காக பெண்கள் காத்து இருந்தனர். ஒவ்வொருவராக வந்ததும் அவர்கள் உற்சாகத்தில் ஓடிச்சென்று கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒரு ஆண்டுக்கு முன்பு காணும் பொங்கல் விழாவில் பார்த்து பழகிய தோழிகளை அடையாளம் கண்டு மகிழ்ச்சியுடன் நலம் விசாரித்தனர். சில குழுவினர் ஒலிப்பெருக்கிகள் வைத்து சினிமா பாடல்களை இசைக்க விட்டு குத்தாட்டம் போட்டு கலக்கினார்கள். கோலாட்டம், குத்தாட்டம் என்று பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். பந்து போட்டு பிடித்தல், கண்கட்டி விளையாட்டு, கபடி, விரட்டிப்பிடித்தல் என்று பெண்கள் குதூகலத்துடன் விளையாடினார்கள். குடும்பப்பெண்கள் பலரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதை பார்த்து அவர்களின் மகள்களே ஆச்சரியப்பட்டு கட்டிப்பிடித்து வாழ்த்தினார்கள். பூங்காவில் மகிழ்ச்சிக்கொண்டாட்டம் அனைத்து பகுதிகளிலும் எதிரொலித்தது.

ஈரோடு மூலப்பட்டறை பகுதியை சேர்ந்த மயில்வேணி என்ற பெண் கூறும்போது, ‘நான் 30 ஆண்டுகளாக வ.உ.சி. பூங்கா காணும் பொங்கல் விழாவுக்கு தவறாமல் வந்து கொண்டிருக்கிறேன். தற்போது 66 வயதாகிறது. ஆண்டு முழுவதும் வீடு, குடும்பம் என்று இருக்கும் என்னைப்போன்ற பெண்களுக்கு காணும் பொங்கல் விழா புதிய உற்சாகத்தை கொடுப்பதாக இருக்கிறது. இங்கு எந்த ஆண்களும் இருப்பதில்லை. இளம் பெண்களுடன் பல்வேறு விளையாட்டுகளில் அவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாடும்போது மனஅழுத்தம் நீங்குகிறது. எனவே காணும் பொங்கலை எதிர்பார்த்து காத்து இருந்து விழாவில் கலந்து கொள்கிறேன்’ என்றார்.

கருங்கல்பாளையத்தை சேர்ந்த சந்திரா என்ற பெண் ஆண்டுதோறும் தவில் அடித்து பிற பெண்களையும் உற்சாக ஆட்டம்போட வைப்பார். அவர் இந்த ஆண்டும் வந்து தவில் இசைக்கருவியை முழக்கி உற்சாக ஆட்டம் போட்டதுடன், மற்ற பெண்களையும் உற்சாகப்படுத்தி னார். மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த உஷா நந்தினி என்ற பெண் கூறும்போது, காணும் பொங்கலுக்கு வ.உ.சி.பூங்காவுக்கு வந்து விட்டால் நமது இஷ்டத்துக்கு ஆட்டம்போடலாம். இங்கு பெரும்பாலானவர்கள் தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ளவே வருகிறார்கள் என்பதால் அதிகமாக யாரையும் வேடிக்கை பார்ப்பதில்லை. எனவே நாமும் வேடிக்கை பார்க்காமல் மகிழ்ச்சியாக விழாவை கொண்டாட முடிகிறது’ என்றார்.

நேற்று இரவு 7 மணிவரை பெண்கள் பூங்காவில் இருந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டும், பிறரின் ஆட்டம், விளையாட்டை ரசித்துக்கொண்டும், வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

வ.உ.சி. பூங்காவின் உள் பகுதியில் நேற்று பெண் போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆண் போலீசாரும் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள மரங்களில் வவ்வால்கள் அதிக அளவில் வசிக்கத்தொடங்கி உள்ளன. நேற்று ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்ததால் வவ்வால்கள் அச்சத்தில் பறந்து பெண்களையும் பயமுறுத்தியது.

Next Story