பொங்கல் பண்டிகை: நாகை மாவட்டத்தில், ரூ.6 கோடியே 68 லட்சம் மது விற்பனை - கடந்த ஆண்டை விட ரூ.34 லட்சம் அதிகம்


பொங்கல் பண்டிகை: நாகை மாவட்டத்தில், ரூ.6 கோடியே 68 லட்சம் மது விற்பனை - கடந்த ஆண்டை விட ரூ.34 லட்சம் அதிகம்
x
தினத்தந்தி 18 Jan 2020 3:45 AM IST (Updated: 18 Jan 2020 1:48 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.6 கோடியே 68 லட்சத்துக்கு மது விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட ரூ.34 லட்சம் அதிகம் ஆகும்.

நாகப்பட்டினம்,

பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் அதிகளவில் மது பாட்டில்கள் விற்பனை செய்வதற்காக இலக்கு நிர்ணயம் செய்யப்படும். அதன்படி ஏராளமான வகையில் மது பாட்டில்கள் கடைகளில் இருப்பு வைக்கப்படுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஆண்டு 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டது. மேலும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் 3 முதல் 5 நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. எனவே மது பிரியர்கள் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

நாகை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 100 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பீர் மற்றும் மது பாட்டில்கள் ரூ.2 கோடியே 44 லட்சத்து 30 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மறுநாள் 15-ந் தேதி (புதன்கிழமை) பீர் மற்றும் மது பாட்டில்கள் ரூ.4 கோடியே 24 லட்சத்து 23 ஆயிரத்து 995-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இந்த ஆண்டு பொங்கலையொட்டி 2 நாட்களில் மட்டும் ரூ.6 கோடியே 68 லட்சத்து 54 ஆயிரத்து 155-க்கு பீர் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பொங்கலையொட்டி 14, 15 ஆகிய 2 நாட்களில் மது பாட்டில்கள் மற்றும் பீர் விற்பனை ரூ.6 கோடியே 34 லட்சத்து 32 ஆயிரத்து 485 ஆக இருந்தது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.34 லட்சத்து 21 ஆயிரத்து 670 அதிகமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Next Story