சத்திரப்பட்டி பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரம்; விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை


சத்திரப்பட்டி பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரம்; விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 19 Jan 2020 4:00 AM IST (Updated: 18 Jan 2020 10:44 PM IST)
t-max-icont-min-icon

சத்திரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சத்திரப்பட்டி, 

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் சத்திரப்பட்டி, விருப்பாச்சி, வீரலப்பட்டி, தா.புதுக்கோட்டை, சிந்தலவாடம்பட்டி, பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிகள், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, கொத்தயம், தேவத்தூர், 16 புதூர், கள்ளிமந்தையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

தற்போது மக்காச்சோளம் விளைச்சல் அடைந்துள்ளதால் அவற்றை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு சாகுபடியாகும் மக்காச்சோளம் உணவுப்பொருள், குளுக்கோஸ் தயாரிப்பு மற்றும் கோழி, ஆடு, மாடுகளின் தீவனங்கள் தயாரிப்பதற்கும் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. எனவே ஆண்டு முழுவதும் மக்காச்சோளத்துக்கு என எப்போதும் நிலைத்த விலை இருக்கும்.

இந்தநிலையில் தற்போது சத்திரப்பட்டி பகுதியில் மக்காச்சோள அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் அங்கு ஏராளமான வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்காக குவிந்துள்ளனர். அவர்கள் வயல்களில் அறுவடையாகும் மக்காச்சோளத்தை மூட்டைகளில் கட்டி அங்கேயே எடை போட்டு கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால் மக்காச்சோளம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலை வீழ்ச்சியால் 100 கிலோ மக்காச்சோள மூட்டை ரூ.1,700 முதல் ரூ.1,850 வரை தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஏற்கனவே புழு தாக்குதல், விதை, உரம் உள்ளிட்டவற்றுக்கு அதிக செலவு செய்துள்ளோம். மேலும் தற்போது அறுவடைக்கும் செலவாகிறது. ஆண்டு முழுவதும் தேவைகள் இருந்தும் மக்காச்சோளத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றிய பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளோம் என்றனர்.

Next Story