கூடலூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் - வாழை மரங்கள் சேதம்
கூடலூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டுயானைகள் வாழை மரங்களை நாசம் செய்தன.
கூடலூர்,
மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் ஒட்டிய பகுதியில் கூடலூர் அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதிகளில் மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, குரங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி மலையடிவாரத்தில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் வனப்பகுதியையொட்டி அகழி, சோலார் மின்வேலிகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எள்கரடு, நாயக்கர்தொழு, பளியன்குடி பகுதிகளில் சுமார் 2 கி.மீ. தூரம் அகழிகள் வெட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அகழிகளில் பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யவில்லை. இதனால் அகழிகளில் மண் மூடியதுடன், மீண்டும் வனவிலங்குகள் விளைநிலங்களில் புகுந்து விடுகின்றன.
இந்நிலையில் நேற்று கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில் ரகுபதி, வைரபிரபு ஆகியோரின் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் அவை அங்குள்ள 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. அதிகாலை வரை முகாமிட்டு இருந்த காட்டுயானைகள் பின்னர் தானாக வனப்பகுதிக்குள் சென்றன.
நேற்று காலை தோட்டத்துக்கு சென்ற விவசாயிகள் காட்டுயானைகள் வாழை மரங்களை நாசப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள், லோயர்கேம்ப்பில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனவர்கள் சிவலிங்கம், பாபு ஆகியோர் சேதம் அடைந்த வாழைமரங்களை பார்வையிட்டனர்.
இதற்கிடையே காட்டுயானைகள் சேதப்படுத்தியதில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு வனத்துறையினர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி காட்டுயானைகளை தோட்டங்களில் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story