தொண்டி அருகே கடலில் படகு கவிழ்ந்து சிறுவன் பலி; 14 பேர் மீட்பு
தொண்டி அருகே சதுப்புநில காடுகளை பார்க்க 15 பேருடன் சென்ற படகு கடலுக்குள் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். 14 பேர் மீட்கப்பட்டனர். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உசிலனக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி அமுதா (வயது 35). இவர்களுடைய குழந்தைகள் விஷ்வஜித் (5), தஷ்னி பவுசிகா (2).
உசிலனக்கோட்டை கிராமத்தில் குழந்தைகளுடன் அமுதா வசித்தார். நேற்று விடுமுறை நாள் என்பதால் அமுதா, அவருடைய குழந்தைகள் உள்பட 3 குடும்பத்தை சேர்ந்த 15 பேர், தொண்டி அருகே உள்ள காரங்காடு சுற்றுலா மையத்திற்கு சென்றனர். பின்பு மாலை 3 மணி அளவில் வனத்துறைக்கு சொந்தமான ஒரு படகில் பெரியவர்கள் 8 பேர், சிறுவர்-சிறுமிகள், குழந்தைகள் 7 பேர் என 15 பேரும் சதுப்புநில காடுகளை சுற்றிப் பார்க்க கடலில் படகு சவாரி செய்தனர்.
இந்த படகை வனத்துறை ஊழியர் செங்கோல் என்பவர் இயக்கியுள்ளார். இதில் பயணம் செய்த 5 பேர் மட்டுமே பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடலுக்குள் அந்த படகை திருப்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்த 15 பேரும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். அப்போது பாதுகாப்பு உடை அணிந்திருந்தவர்களை சிலர் பிடித்துக்கொண்டனர். மேலும் சிலர் கவிழ்ந்த படகின் மீது ஏறி அமர்ந்து கொண்டு கரையில் இருந்த மீனவர்களை உதவிக்கு அழைத்தனர்.
உடனே மீனவர்கள் 2 பைபர் படகுகளில் அங்கு விரைந்து வந்து கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர். இதில் அமுதாவின் மகன் விஷ்வஜித் (5) மட்டும் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்தான். அவனது தங்கை தஷ்னி பவுசிகாவை மயங்கிய நிலையில் மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதல் உதவி அளித்ததை தொடர்ந்து அவள் உயிர் பிழைத்துக்கொண்டாள். மற்றவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டனர்.
இறந்த சிறுவன் விஷ்வஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்து சிறுவனின் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர்.
திருவாடானை தாசில்தார் சேகர் அங்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சவாரி செய்த போது கடலில் படகு கவிழ்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் காரங்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story