அடிப்படை வசதி கேட்டு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டம்
மடத்துப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணை அருகிலுள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாடு செய்ய இவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறினர். மேலும் அந்த கிராமத்தில் சாலை வசதி, வாருகால் வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லை எனவும் குற்றம்சாட்டினர். மேலும் மயானப்பகுதி ஊருக் குள் அமைந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதாக கூறினர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் மடத்துப்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
மேலும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தங்களது ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கையில் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வெம்பக்கோட்டை வட்டாட்சியர் விஜயராஜ் மற்றும் ஏழாயிரம்பண்ணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுகுறித்து நாளை சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக்கூட்டம் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story