கொளத்தூர் அருகே, அடுத்தடுத்து 4 வீடுகள், கோவில் உண்டியலை உடைத்து திருட்டு


கொளத்தூர் அருகே, அடுத்தடுத்து 4 வீடுகள், கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 18 Jan 2020 10:42 PM GMT (Updated: 18 Jan 2020 10:42 PM GMT)

கொளத்தூர் அருகே அடுத்தடுத்து 4 வீடுகள் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம், 

சென்னை கொளத்தூரை அடுத்த ராஜமங்கலம் நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 31). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

இதே தெருவைச் சேர்ந்தவர் கமல் (42). இவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மர்மநபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த மடிக்கணினி ஆகியவற்றை திருடிச்சென்றனர்.

மேலும் அதே தெருவைச்சேர்ந்த சுரேஷ்(34) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போனையும், அதே தெருவில் உள்ள சித்ரா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போனையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

அத்துடன் அங்குள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தையும், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.16 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இதுபற்றி ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரேநாள் இரவில் அடுத்தடுத்து 4 வீடுகள் மற்றும் கோவிலில் திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

Next Story