பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 1,13,914 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 1,13,914 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
x
தினத்தந்தி 20 Jan 2020 4:15 AM IST (Updated: 19 Jan 2020 10:57 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 914 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

அரியலூர்,

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம்கள் பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் துறைமங்கலம் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் நடந்த போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை கொடுத்து முகாமினை தொடங்கி வைத்தார். மேலும் அவர் கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கீதாராணி, தாசில்தார் பாரதிவளவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

வேப்பந்தட்டை

இதேபோல் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை வேப்பந்தட்டை ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், மகாதேவி ஜெயபால், ஒன்றியக்குழு துணை தலைவர் ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 387 மையங்களில் 45 ஆயிரத்து 758 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. முகாமில் சுகாதாரப்பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் ஆயிரத்து 548 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அரியலூரில் அரசு கொறடா...

அரியலூர் பஸ் நிலையத்தில் கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை கொடுத்து முகாமினை தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சந்திரசேகர், துணை தலைவர் அசோகன், ஒன்றியக்குழு பெருந்தலைவர் செந்தமிழ்செல்வி, துணை தலைவர் சரஸ்வதி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஹேமசந்த் காந்தி, அரியலூர் நகராட்சி ஆணையர் குமரன், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி, வட்டாட்சியர் கதிரவன், வட்டார மருத்துவ அலுவலர்கள் அனிதா, நிரஞ்சனா, சுந்தர்ராஜன், மாவட்ட பயிற்சி குழு மருத்துவ அலுவலர் சதீஸ்குமார் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

செந்துறை

இதேபோல் செந்துறை போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை வட்டார மருத்துவ அலுவலர் இந்துமதி தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டத்தில் நகர்புறங்களில் 46 மையங்களிலும், ஊரக பகுதிகளில் 496 மையங்களிலும் என மொத்தம் 542 மையங்களில் 68 ஆயிரத்து 156 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் முகாமில் சுகாதாரப்பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 340 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story