நீலகிரி மாவட்டத்தில் 42 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தொடங்கி வைத்தார்


நீலகிரி மாவட்டத்தில் 42 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Jan 2020 10:30 PM GMT (Updated: 19 Jan 2020 5:28 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் 42 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

ஊட்டி,

இளம்பிள்ளைவாதத்தை ஒழிக்க ஆண்டுதோறும் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று தொடங்கியது. நீலகிரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஊட்டி வெல்பேக் எஸ்டேட் பகுதியில் நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் நடந்தது.

ஊட்டிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த முகாம்களில் குழந்தையின் பெயர் மற்றும் ஊர் ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இவ்வாறு சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் விரல்களில் அடையாளத்திற்கு மை வைக்கப்பட்டது. நீலகிரியில் மொத்தம் 774 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட 41 ஆயிரத்து 858 குழந்தைகளுக்கு சொட்டு வழங்கப்பட்டது.

இந்த பணிகளில் சுகாதார துணை ஊழியர்கள், குழந்தைகள் ஊட்டச்சத்து மைய ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் உள்பட மொத்தம் 3,096 பேர் ஈடுபட்டனர். ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகள் அடுத்து வருகிற 2 நாட்களில் பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

Next Story