குன்னூர் அருகே, மளிகை, ரே‌‌ஷன் கடைகளை சூறையாடிய காட்டு யானைகள்


குன்னூர் அருகே, மளிகை, ரே‌‌ஷன் கடைகளை சூறையாடிய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 20 Jan 2020 3:45 AM IST (Updated: 19 Jan 2020 10:58 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள மளிகை, ரே‌‌ஷன் கடைகளை சூறையாடின.

குன்னூர், 

மஞ்சூர் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குட்டியுடன் கூடிய 4 காட்டு யானைகள் குன்னூர் அருகேயுள்ள கிரைக்மோர், தூதூர்மட்டம், கிளிஞ்சடா போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த யானைகளை விரட்டினர். இதனால் அந்த யானைகள் கோடேரி கிராம பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் புகுந்தன.

இதையொட்டி கோடேரி கிராம மக்கள் பச்சை தேயிலை பறிக்கவும், தோட்ட பராமரிப்பிற்காகவும் தேயிலை தோட்டத்திற்கு செல்லக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர். மேலும் கோடேரி கிராமப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில், கிரைக்மோர் எஸ்டேட் குடியிருப்புக்குள் நேற்று முன்தினம் இரவு 4 யானைகள் புகுந்தன. பின்னர் அங்குள்ள ரே‌‌ஷன் கடையை சேதப்படுத்தி சுமார் 100 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை தின்றன. மேலும், குட்டி யானை உள்ளே புகுந்து அங்குள்ள மூட்டைகளை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் ரே‌‌ஷன் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனைதொடர்ந்து அந்த யானைகள் ரே‌‌ஷன் கடைக்கு அருகில் உள்ள சிவதாஸ் என்பவரின் மளிகை கடையையும் சூறையாடின. பின்னர் அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.

மளிகை, ரே‌‌ஷன் கடைகளை காட்டு யானைகள் சூறையாடியது குறித்து தகவல் அறிந்த குந்தா வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அந்த யானைகள் ஆக்ரோ‌‌ஷத்துடன் இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

பந்தலூர் அருகே தட்டாம்பாறை, கோட்டப்பாடி, மழவன்சேரம்பாடி, கருத்தாடு உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தோட்டங்களில் நுழையும் யானைகள் வாழை, பாக்கு, தென்னை மரங்களை சேதப்படுத்துவதுடன் விவசாய பயிர்களையும் நாசப்படுத்தி வருகிறது. அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையை அடிக்கடி வழிமறித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் இரவு தட்டாம்பாறை பகுதிக்குள் 5 காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் அங்குள்ள குடியிருப்புகளை விடிய,விடிய முற்றுகையிட்டன. இதில் ஒரு யானை கலைச்செல்வி என்பவரின் வீட்டை சேதப்படுத்தியது. இதனால் பீதி அடைந்த கலைசெல்வி குடும்பத்தினர் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிதிர்காடு ரேஞ்சர் மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டியடித்தனர். மேலும் சம்பவ இடத்தை கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story