ஓட்டப்பிடாரம் அருகே, மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் சாவு


ஓட்டப்பிடாரம் அருகே, மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் சாவு
x
தினத்தந்தி 20 Jan 2020 4:15 AM IST (Updated: 19 Jan 2020 11:13 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார்.

ஓட்டப்பிடாரம், 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓசநூத்தை சேர்ந்தவர் மாரிப்பாண்டி. இவர் தனியாக மற்றொரு வீட்டில் வைத்து முறுக்கு, சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி மீனா. இவர்களுடைய மகன் ஜெயகணேஷ் (வயது 14), மகள் ஜெயலட்சுமி (11).

ஜெயகணேஷ் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அவ்வப்போது விடுமுறை நாட்களில், தந்தைக்கு உதவியாக அவருடன் முறுக்குகளை பாக்கெட்டுகளில் அடைக்கும் பணியிலும் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி நேற்று முன் தினம் மாலையில் ஜெயகணேஷ், முறுக்கு தயாரிக்கும் இடத்துக்கு சென்றார். அங்கு முறுக்குகளை பாக்கெட்டு போடுவதற்காக மின்சாரம் மூலம் பாலித்தீன் கவரை ஒட்டும் எந்திரத்தை இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஜெயகணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story