தஞ்சை பெரியகோவில் புதிய கொடிமரத்துக்காக 40 அடி உயர தேக்கு மரக்கட்டை தஞ்சைக்கு வந்தது


தஞ்சை பெரியகோவில் புதிய கொடிமரத்துக்காக 40 அடி உயர தேக்கு மரக்கட்டை தஞ்சைக்கு வந்தது
x
தினத்தந்தி 19 Jan 2020 11:00 PM GMT (Updated: 19 Jan 2020 5:43 PM GMT)

தஞ்சை பெரியகோவில் புதிய கொடிமரத்துக்காக 40 அடி உயர தேக்கு மரக்கட்டை தஞ்சைக்கு வந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், நந்தி பெருமான் ஆகிய சன்னதிகளுக்கு முன்பு கொடிமரம் அமைந்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட இந்த கொடிமரம் தேக்கு மரத்தால் ஆனது. இந்த கொடிமரத்தை சுற்றிலும் உலோகம் பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கொடிமரத்தில் சுற்றி இருந்த உலோகம் கழற்றப்பட்டு பாலீஷ் போடப்பட்டு வருகிறது.

இந்த கொடிமரத்தின் பீடம் மட்டும் 5 அடி உயரம் கொண்டது. அதற்கு மேல் 28 அடி உயரத்தில் கொடிமரம் இருந்தது. கொடிமரத்தின் அடிப்பகுதியில் சேதமடைந்து இருந்ததால் அந்த கொடிமரம் அகற்றப்பட்டது. இதற்கு பதிலாக புதிய கொடிமரம் வாங்குவதற்காக பல்வேறு ஊர்களுக்கு அதிகாரிகள் சென்றனர்.

தேக்கு மரக்கட்டை

சென்னையில் பர்மா தேக்கு மரக்கட்டையை ரூ.9 லட்சத்திற்கு அதிகாரிகள் வாங்கினர். இந்த மரக்கட்டை சென்னையில் இருந்து லாரி மூலம் திருச்சி திருவெறும்பூரில் உள்ள மரஅரவை ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுக்கப்பட்டது. தற்போது 40 அடி உயரத்தில் உள்ள மரக்கட்டை லாரி மூலம் தஞ்சை பெரியகோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அதை கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். ஏற்கனவே 33 அடி உயரத்தில் கொடிமரம் நடப்பட்டு இருந்ததால் தேவைக்கு ஏற்ப தேக்கு மரக்கட்டையை ஆசாரிகளை கொண்டு செதுக்கும் வேலை தொடங்கப்பட இருக்கிறது.

Next Story