தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் - கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வினியோகத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே உள்ள மேலத்தட்டப்பாறை பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று காலை நடந்தது. முகாமில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் போலியோவை ஒழிக்கும் வகையில் அரசின் சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் அனைத்துப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டு 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 35 ஆயிரத்து 629 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இதற்காக மாவட்டம் முழுவதும் 1,222 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், நடமாடும் மருத்துவக்குழு மூலமாக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களிலும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வருபவர்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த பணிகளில் பொதுசுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்கள், பிறதுறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் உள்பட மொத்தம் 5 ஆயிரத்து 238 பேர் ஈடுபட்டு உள்ளனர்.
பொது மக்கள் எந்தவொரு குழந்தையும் விடுபடாத வகையில் அனைத்து குழந்தைகளுக்கும் கண்டிப்பாக சொட்டு மருந்து வழங்கி இளம்பிள்ளைவாதம்(போலியோ) இல்லாத நிலையை ஏற்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story