கொடைக்கானல் அருகே, விடுதியில் விபசாரம்; புரோக்கர் கைது - வடமாநில பெண்கள் 6 பேர் மீட்பு
கொடைக்கானல் அருகே விடுதியில் விபசாரம் நடத்தியது தொடர்பாக புரோக்கர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து வடமாநில இளம்பெண்கள் 6 பேர் மீட்கப்பட்டனர்.
கொடைக்கானல்,
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர், தனது நண்பர்களுடன் நேற்று காலை கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். அங்கு அவர்கள் தங்குவதற்காக அறைகள் தேடினர். அப்போது அவர்களை அப்சர்வேட்டரியை சேர்ந்த மோகன்ராஜா (வயது 40) என்பவர் அணுகி தன்னிடம் குறைந்த விலையில் அறைகள் வாடகைக்கு இருப்பதாகவும், அத்துடன் வடமாநில இளம் பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் கூறினார்.
இதையடுத்து அவர்களை கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டிகிரஸ் பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கு சென்ற பிரேம்குமார், விடுதியில் இளம் பெண்களை வைத்து விபசாரம் நடத்துவது குறித்து கொடைக்கானல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்- இன்ஸ்பெக்டர் காதர்மைதீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த மோகன்ராஜாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு வட மாநில இளம்பெண்கள் 6 பேரை வைத்து விபசாரம் நடத்தியதும், இதற்கு அவர் புரோக்கராக செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே போலீசாரை கண்டதும் அங்கிருந்த திண்டுக்கல் அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த ஸ்டீபன், நாயுடுபுரத்தைசேர்ந்த கோசலைராமன் ஆகியோர் தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து அங்கு இருந்த வடமாநிலத்தை சேர்ந்த 6 இளம்பெண்களையும் போலீசார் மீட்டனர். பின்னர் அவர்கள், திண்டுக்கல்லில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் விபசாரத்துக்கு பயன்படுத்திய காரையும், 4 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த செல்போன்களில் பதிவான எண்களை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story