கள்ளக்குறிச்சி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


கள்ளக்குறிச்சி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Jan 2020 4:30 AM IST (Updated: 20 Jan 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள மின்மோட்டாருடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மின்மோட்டார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழுதானது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை உருவானதால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டது.

குடிநீருக்காக அப்பகுதி மக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்கள் பெரும் அவதி அடைந்தனர். இது குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் அங்குள்ள மெயின்ரோட்டில் ஒன்று திரண்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்மோட்டாரை சீரமைத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story