அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே, வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன்


அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே, வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன்
x
தினத்தந்தி 20 Jan 2020 4:55 AM IST (Updated: 20 Jan 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரவுடிகளிடையே ஏற்பட்ட மோதலில் அவர் வெட்டப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

ஆவடி, 

அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை தண்டவாளம் ஓரத்தில் கை, கால், முகம் ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்களுடன் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன், உயிருக்கு போராடுவதாக அம்பத்தூர் மற்றும் ஆவடி ரெயில்வே போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்குசென்று உயிருக்கு போராடிய சிறுவனை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகர் 6-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த ஆதிகேசவன் (வயது 17) என்பதும், ரவுடிகள் இடையே ஏற்பட்ட மோதலில், இவரை வெட்டியதும் தெரிந்தது.

இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

கொளத்தூரை சேர்ந்தவர்கள் அந்தோணி மற்றும் மாசி. ரவுடிகளான இவர்கள் இருவர் மீதும் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் கைதாகி புழல் சிறையில் இருக்கும்போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

இந்தநிலையில் ஆதிகேசவன், மாசியுடன் பேசி வருவது அந்தோணிக்கு தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு அந்தோணி தனது கூட்டாளிகள் 3 பேருடன் ஆதிகேசவனை மது அருந்தலாம் என ஆட்டோவில் அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள உப்புகாரமேடு பகுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கு ஏற்கனவே அவரது கூட்டாளிகள் 2 பேர் தயாராக இருந்தனர்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது அந்தோணி, ‘மாசியை கொலை செய்யவேண்டும். அவரது வீட்டை காட்டு’ என ஆதிகேசவனிடம் கேட்டார். அதற்கு அவர், ‘மாசி எனக்கு நெருங்கிய நண்பர் கிடையாது. அவரது வீடு தெரியாது. எப்போதாவது பார்த்தால் பேசுவேன்’ என்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணி மற்றும் அவரது கூட்டாளிகள் ஆதிகேசவனை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இரண்டு கால் முட்டிகள், இடது கை மற்றும் கன்னம் ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து குற்றுயிராய் உப்புகாரமேடு பகுதியில் இரவு முழுவதும் விழுந்து கிடந்த ஆதிகேசவன், நேற்று காலை அங்கிருந்து அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை ஒட்டிய பகுதிக்கு மெதுவாக நகர்ந்து வந்து கிடந்தார்.

அப்போதுதான் பொதுமக்கள் பார்த்து தகவல் கொடுத்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடம், அம்பத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த வழக்கு அம்பத்தூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்படும் என ஆவடி ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Next Story